வரும் மே  மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சு வார்த்தை என பிஸியாக உள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களில் தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்..

அதே போல் பிரதமர் மோடி நேற்று கேரளாவில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். கொல்லத்தில் பேசிய அவர், பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசை கடுமையாக குற்றம்சாட்டி பேசினார்.

பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டபின் பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் கேரள மாநில கவர்னர் சதாசிவமும் சாமி தரிசனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து இலவச சாமி தரிசனம் செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

கொல்லத்தில் மேடை போட்டு இடதுசாரி அரசை கடுமையாக குற்றம்சாட்டி பேசிய அடுத்த இரண்டு மணி நேரத்தில் பினராயி விஜயனும் மோடியும் இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.