பொங்கல் திருநாளையொட்டி, தமிழக மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை போகியோடு தொடங்குகிறது. ஜாதி மதம் கடந்த தமிழர்கள் ஒன்றாக கொண்டாடும் பண்டிகை பொங்கல். அனைத்து உயிர்களையும் காக்கும் இயற்கையை வணங்கும் பொருட்டு தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மத, பேதமின்றி மக்கள் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூறி வருகின்றனர். வீட்டு வாசலில் தோரணம் கட்டி, வண்ண வண்ண கோலமிட்டு உற்சாகமாகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டியுடன் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில், பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், உலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளை கொண்டாடுகிறது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இத்திருநாள் அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களாலும் நிரப்பிடட்டும். அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும். இவ்வாறு அந்த பதிவில் மோடி தெரிவித்துள்ளார். அதேபோல், ஆங்கிலத்திலும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.