சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கப்பட்டது. முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய  தொல்லியல் துறை மேற்கொண்டது.  நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. அந்த ஆய்வின்போது கிடைத்த பொருட்கள் தொல்லியல் துறையால் அறிக்கையாக வெளியிடப்பட்டது. அதன்படி வைகைக்கரை நாகரீகம் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற வரலாற்று உண்மை தெரியவந்தது. பின்னர் அகழ்வாய்வு பணிகளை விரிவுபடுத்தி, மணலூர், அகரம், கொந்தகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகள் தமிழர்கள் வாழ்ந்தத்ற்கான அடையாளங்களாக முதுமக்கள் தாழிகள், ஓடுகள், நாணயங்கள், கண்ணாடி வளையல்கள், கல்மணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இவைகளை பாதுகாத்து பாராமரிக்கும் வகையில், அருங்காட்சியகம் அமைக்க கோரிக்கை எழுந்த நிலையில், 12 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு  அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் இது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான தன்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை, இது மக்கள் பிரதிநிதிகளை புறக்கணிக்கும் செயல் என விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தமிழரின் பெருமையை பறை சாற்றும் கீழடி ஆய்வு குறித்தும், அங்கு அருங்காட்சியகம் திறக்கப்பட வேண்டும் என்று நான் ஏற்கனவே பாராளுமன்றத்திலும் பல  போட்டிகளின் மூலம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தேன். 

அதற்கு அரசு செவிசாய்த்து கீழடியில் தமிழக அரசின் சார்பில் 12.21 கோடி செலவில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி உள்ளார்கள். மிக்க மகிழ்ச்சி. இந்த நிகழ்வுக்கு சிவகங்கை தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு  எவ்விதமான அழைப்போ, தகவலோ தெரிவிக்கவில்லை. இது மக்கள் பிரதிநிதிகளை புறக்கணிப்பது போலவே அமைந்துள்ளது. பழந்தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் விதத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம் அங்கு அமையப்பெற்றது அப்பகுதி மக்களுக்கு பெருமையே. இம்மாதிரி பொது நிகழ்வில் அப்பகுதியைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகளை அரசியல் மாச்சரியங்களை கடந்து அனைவரையும் கலந்துகொள்ள செய்வது தமிழர்களாகிய நமக்குப் பெருமை. மேலும் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அருங்காட்சியக பணிகள் விரைந்து நடைபெற்று விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். என அதில் கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.