தமிழக அரசியல் களத்தில் சுமார் 50 ஆண்டுகாலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் எதிரும் புதிருமாக இருந்து வருகின்றன.

அதிலும் அதிமுகவை ஜெயலலிதா வழிநடத்திய காலக்கட்டத்தில், அதிமுகவினரும் திமுகவினரும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ள கூட மாட்டார்கள். இரு கட்சிகளில் எது ஆளுங்கட்சியாக இருந்தாலும், இதுதான் நிலை. 

ஆனால் அந்த நிலை மாற தொடங்கியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை வழக்கத்தை காட்டிலும் சற்று மோசமானதை அடுத்து கடந்த 26ம் தேதி இரவு, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு சென்று ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

அப்போது திமுகவின் துரைமுருகன், ஆ.ராசா, ஆகியோர் ஒருபுறமும் எதிரே அதிமுக அமைச்சர்களும் அமர்ந்திருந்தனர். கருணாநிதியின் இல்லத்திற்கு அமைச்சர்கள் சென்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தை கடந்து தமிழக மக்களிடையேயும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பரபரப்பாக பேசப்பட்டது. முன்பெல்லாம் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளக்கூட மாட்டாத நிலை மாறி, திமுக தலைவரின் வீட்டிற்கே சென்று துணை முதல்வரும் அமைச்சர்களும் நலம் விசாரித்தது, மரபு, அரசியல் நாகரீகம் என்பதை கடந்து ஆரோக்கியமான அரசியலாகவே பார்க்கப்பட்டது. 

அன்று துணை முதல்வர் சென்று பார்த்த நிலையில், இன்று காவேரி மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் பழனிசாமி, ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்ததோடு, கருணாநிதியை நேரில் பார்த்ததாகவும் கூறினார். 

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் ஸ்டாலினை சந்தித்து அவருடன் ஒன்றாக அமர்ந்திருந்த புகைப்படம், தமிழக அரசியலில் கடந்த 50 ஆண்டுகாலமாக நிலவிவந்த வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது. 

வெறுப்பு அரசியல் முடிந்து, ஆரோக்கியமான அரசியல் தமிழகத்தில் தொடங்குவதற்கான அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது.