முதலமைச்சர் புகைப்படத்துடன் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக போஸ்டரில் சந்திரசேகர் வாராரு வெளிச்சம் தரப் போறாரு ஆதரப்பீர் வாக்களிப்பீர் வெற்றி சின்னம் பிரஷர் குக்கர் என்று  ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டப்பட்டுள்ள போஸ்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆசியுடன் போட்டி என அச்சிடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஆனால், சில மாவட்டங்களில் இருந்து புதிய மாவட்டங்கள் உதயமானதால், அந்த பிரிக்கப்பட்ட மாவட்டங்களிலும், புதிய மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. அந்த வகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. 

தற்போது இந்த மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. கடந்த 22-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. வேட்பு மனுக்களை திரும்ப பெற கடந்த ஞாயிற்றுக்கிழமை கடைசிநாளாகும். இதனையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில், தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைவரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 13வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமமுக சார்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக ஓட்டப்பட்டுள்ள போஸ்டரில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆசியுடன் போட்டி என அச்சிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் புகைப்படத்துடன் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக போஸ்டரில் சந்திரசேகர் வாராரு வெளிச்சம் தரப் போறாரு ஆதரப்பீர் வாக்களிப்பீர் வெற்றி சின்னம் பிரஷர் குக்கர் என்று ஒட்டப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.