அமைச்சர்கள் எங்கே? எம்எல்ஏக்கள் எங்கே? அல்லாடும் பொது மக்கள்..போலீஸ் ஸ்டேசனில் குவியும் புகார்கள்…

ஓபிஎஸ் சசிகலா இடையே நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியால் தமிழகமே கலகலத்துப் போயிருக்கிறது.அதிமுக எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக சசிகலா பக்கம் இருந்தாலும், அவர்கள் ஒவ்வொருவராக ஓபிஎஸ் பக்கம் வரத் தொடங்கியுள்ளனர்.

ஓபிஎஸ், அமைச்சர் பாண்டியராஜன் உட்பட 8 பேர் சசிகலாவிடம் இருந்து பிரிந்து வந்துள்ளனர். இவர்கள் ஓபிஎஸ் வசம் சென்ற விடாமல் தடுக்கும் வகையில் அமைச்சர்கள் உட்பட அனைத்து எம்எல்ஏக்களும் சென்னையை அடுத்த கூவத்துர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பெரும்பாலான பொது மக்கள் சசிகலாவுக்கு எதிராகவே இருப்பதால் தாங்கள் தேர்ந்தெடுத்த எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்ஐ ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனால் தங்கள் தொகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை காணவில்லை என காவல் விநிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர்.


வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் மணி என்பவர், ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று கடந்த 6ம் தேதி முதல், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணியை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

கடந்த 5 ஆம் தேதி முதல் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவைக் காணவில்லை என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம், அதிமுக நிர்வாகி ரவிசங்கர் மனு அளித்துள்ளார். அவரை யாரோ கடத்திவிட்டனர் என்றும் அவரை மீட்டுத் தரவேண்டும் என்றும் புகார் அளித்தார்.

கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, தொழில் துறை அமைச்சர் சம்பத், எம்எல்ஏக்கள் சத்யா, கலைச்செல்வம், பாண்டியன், முருகுமாறன் ஆகியோர், சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருவதால் அவர்கள் அனைவரையிம் மீட்டுத் தரவேண்டும் என்று அந்தந்த தொகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

திருவாடானை தொகுதியில், முக்குலத்தோர் புலிப்படை சார்பில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நடிகர் கருணாஸை காணவில்லை என காளிமுத்து என்பவர், திருவாடானை போலீசில் புகார் அளித்துள்ளார். இப்படி அதிமுக தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து பொது மக்களும் தங்கள் எம்எல்ஏக்களை காணவில்லை என தொடர்ந்து புகார் அளித்த வருகின்றனர்.