டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மத்திய அரசு 971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டடமும் மற்றும் அதன் சுற்று வளாகங்களை அமைக்கும் பணியினை மேற்கொண்டது. ஆனால் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறவில்லை என்றும் இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை கட்டுமான பணிகளையோ, கட்டடம் இடிக்கும் மற்ற பணிகளையோ மேற்கொள்ளக் கூடாது. 

ஆனால் ஆய்வு பணிகளை மேற்கொள்ளலாம், என உச்ச நீதிமறம் உத்தரவிட்டது. இந்த நிலையில் தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

 அதில், புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இரண்டு நீதிபதிகள் புதிய நாடாளுமன்ற கட்டடம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளனர். கட்டுமானப் பணிகளின் போது சுற்றுச்சூழலை காக்கும் வகையில் தூசி பரவலை தடுக்கத் தேவையான கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.