ஊரடங்கை முன்னிட்டு அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள்  மூடப்பட்டது மூடப்பட்டதாகவே இருக்கட்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நடத்தி வரும் மதுபான கடைகள் உள்ளிட்டவை நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளது.  மதுக்கடைகள் மூடப்பட்டதால் கள்ளச் சாராய சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தங்களது டுவிட்டர் பக்கத்தில்;- 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் தீய ஆட்சி முறைமைகளால் குடிநோயாளிகளின் மாநிலமாக தமிழ்நாடே மாறியிருக்கிறது. மக்களின் நலன் காக்க வேண்டிய மாநில அரசே மதுபானக் கடைகளைத் திறந்து மக்களைக் குடிகாரர்களாக்கி வருகிற பேரவலம் தொடர்ச்சியாக இந்த மண்ணில் நடந்து வருகிறது. 

மதுவிலக்கு கேட்டு மக்கள் நல அரசியல் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாக போராடி வருகிறோம். ஆனால், தமிழ்நாடு அரசு இதனைக் கண்டு கொள்ளாமல் தனக்கு வருவாய் வருகிற மிகப்பெரும் வழியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை நடத்தி பெரும்பான்மை மக்களை குடிகாரர்களாக்கி வருகிறது. ஒரு அறிவானச் சமூகமாக தமிழ்ச் சமூகத்தை உருவாக்கத் தெருவெங்கும் படிப்பகங்களை திறக்காமல்; குடி நோயாளிகளை உருவாக்க வீதிதோறும் குடிப்பகங்களைத் திறந்து வைத்து இந்த மண்ணையும், மக்களையும் பாழ்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.

மதுவிலக்கு என்பதைத் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து அதிகாரத்திற்கு வந்த அதிமுக அதனைச் செயற்படுத்தத் துரும்பையும் கிள்ளிப் போடாதிருப்பது மிகப்பெரும் மோசடித்தனம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.