தேனி மக்களவை மற்றும்  பெரியகுளம் சட்டசபை தொகுதி இடைத் தேர்தல் கடந்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பெரியகுளம் தொகுதி வடுகபட்டி சங்கரநாராயணன் நடுநிலைப்பள்ளியில் 197 வது ஓட்டுச்சாவடி உள்ளது. இதில் வரும் 19 ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடத்த தேர்தல்  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பூத்தில்  702 ஆண்கள், 703 பெண்கள் என 1, 405 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஏப்ரல் 18 ல் மாதிரி ஓட்டுகளை அழிக்காமல் அதனுடன் சேர்த்து ஓட்டுப்பதிவு தொடர்ந்ததால் மறு ஓட்டுப்பதிவு நடத்துவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார். ஆனால் இந்த ஓட்டுச்சாவடியில் தேர்தல் அலுவலரே 17 ஓட்டுக்களை 'நோட்டா' விற்கு போட்ட விபரம் வெளியானதால் மறு ஓட்டுப்பதிவு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த பூத்தில் ஓட்டுப்பதிவு துவங்கிய ஒரு மணிநேரத்தில் 63 ஓட்டுக்கள் பதிவானது. திடீரென இயந்திரம் பழுதால் ஓட்டுப்பதிவு தடைபட்டது. இதனை சரிசெய்ய மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்காததால் 2 மணிநேரத்திற்கு பின் புதிய இயந்திரம் கொண்டுவரப்டட்டது. 

ஆனால் ஏற்கனவே பதிவான 63 ஓட்டுக்களை எவ்வாறு கணக்கிடுவது என்ற பிரச்னை எழுந்தது. ஓட்டளித்தவர்களை வரவழைத்து மீண்டும் ஓட்டளிக்க வைப்பது என்ற ஒருமித்த கருத்துக்கு ஏஜென்ட்டுகள் சம்மதித்தனர். வீடு திரும்பியவர்களை கட்சியினர் தேடி, தேடி சென்று 46 பேரை ஓட்டளிக்க வைத்தனர்.

இதில் 17 பேரை மீண்டும் அழைத்து வர முடியவில்லை. பதிவு செய்த 63 ஓட்டுகளுடன் மாலை வரை 904 ஓட்டுகள் பதிவானது. ஓட்டுப்பதிவு முடியும் வரை அந்த 17 பேரும் வராததால் அதிகாரிகள் எவ்வாறு கணக்கை எப்படி சரி செய்வது  என குழப்பத்தில் ஆழ்ந்தனர். தவித்தனர்.

இதையடுத்து பூத் ஏஜென்ட்டுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 17 ஓட்டுக்களை முக்கிய கட்சிகளுக்கு பகிர்ந்து கொள்ள ஏஜென்டுகளை கேட்டனர். இதனை அவர்கள் மறுத்தனர்.

எந்த கட்சிக்கும் ஓட்டுகள் வேண்டாம் 17 ஓட்டுக்களை பதிவு செய்தால்தான் கணக்கை முடிக்க இயலும் என கூறி பெண் வாக்குச்சாவடி  அலுவலர் ஏஜென்ட்டுகள் சம்மதத்துடன் 17 ஓட்டுக்களையும் நோட்டாசக்கு போட்டுள்ளார். 

தேர்தல் முடிந்து ஓரிரு நாட்களுக்கு பின் தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மறு ஓட்டுப்பதிவிற்கு பரிந்துரை செய்துள்ளது தெரிய வந்தது.