மின்கட்டணம் தொடர்பாக தவறான தகவல்களை கூறி திமுக தலைவர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: எதிர்க்கட்சித் தலைவர், தன்னுடைய தொலைக்காட்சி பேட்டியில், அதிக மின் கட்டணம் சம்பந்தமாக சில ஆவணங்களை காண்பித்தார். அவற்றில் ஒன்றில் மட்டுமே, நுகர்வோரின் விவரம் தெளிவாக தெரிந்ததனால், அதை மின்சார வாரியம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், அந்த நுகர்வோர், வீட்டு மின் நுகர்வோர் இல்லை எனவும், தொழில் மின் நுகர்வோர் எனவும் தெரிய வந்தது. தொழில் மின் நுகர்வோர் அட்டையை காண்பிப்பது, மக்களை திசை திருப்பும் காரியமாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திரும்பத்திரும்ப “மின்சார ரீடிங் எடுத்ததில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என மக்கள் கூறுகின்றனர்” எனவும் “தவறான அடிப்படையில் கணக்கீடு” எனவும், “மின்சார வாரியத்திற்கு இலாபம்” எனவும் உண்மைக்கு மாறான செய்தியை கூறி, மக்களை குழப்ப முயல்கிறார்.  மின் கணக்கீட்டு வீதப்பட்டி, அதாவது slab-ஐ மாற்றி மின் கட்டணத்தை ஏற்றி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இலாபம் பார்க்க வேண்டும் என்று மின் கணக்கீடு செய்வதுமில்லை;  அதேபோல இலாப நோக்கத்தை கருத்தில் கொண்டு வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மின்சாரம் விநியோகிப்பதும் இல்லை.

 

எந்த ஒரு அரசும், வீட்டு மின் நுகர்வோர்களுக்கான கணக்கீட்டின் மூலம் இலாபம் பார்க்க வேண்டும் என்று செயல்படுவதில்லை. இந்த அடிப்படையில்தான் மாண்புமிகு அம்மா அவர்கள், வீட்டு மின் நுகர்வோர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் அளித்தார் என்பதை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் நினைவில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில், வீட்டு மின் நுகர்வோர்களுக்கான தற்போதைய மின் கட்டணம், அதன் உற்பத்தி செலவை விட மிக,மிக குறைந்த அளவிலேயே உள்ளது. மேலும், அண்டைமாநிலங்களை விட தமிழ்நாட்டில் மின் கட்டணம் மிகக் குறைவாக உள்ள நிலையில், கட்டணத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்கள் என்பதும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இலாபம் பார்க்கின்றது என கூறுவதிலும், எள்ளளவும் உண்மை இல்லை. முந்தைய திமுக ஆட்சியில் இருண்ட மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை, தொலைநோக்குடன் தனது திடமான செயலாற்றலால், மின்மிகை மாநிலமாக மாற்றி ஒளிரச்செய்த மாண்புமிகு அம்மா அவர்கள், 2016ல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தவுடன், ஒவ்வொரு வீட்டு மின் நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்க ஆணையிட்டார்கள்.இதன்மூலம் சுமார் 2.1 கோடி குடும்பங்களுக்கு மேல் பயன்பெற்று வருகின்றனர். இந்தச் சலுகை மக்களுக்கு வழங்கப்பட்ட பெரிய சலுகையாக மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியவில்லையா? இந்தச்சலுகையினால் மின்சார வாரியத்திற்கு ஏற்படும் செலவை ஈடுகட்ட, வருடத்திற்கு சராசரியாக 2,878 கோடிரூபாய் கடந்த 4 வருடங்களாக தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. 

இதன்பொருட்டு இந்த 4 வருடங்களில் 11,512 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களிலும் இல்லாத சலுகையாகும். பேரிடர் காலத்தில் மட்டுமல்லாமல், அனைத்து காலங்களிலும், தொடர்ந்து 4 ஆண்டுகளைக் கடந்து, பொதுமக்களின் நன்மை கருதி இந்தச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இது, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் அறிந்த விஷயம். மேலும்,100 யூனிட்டிற்குள் மின் நுகர்வு செய்யும் சுமார் 70 லட்சம் ஏழை,எளிய சாமானிய குடும்பங்களுக்கு விலையில்லா மின்சாரமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை திமுக ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்டதா? அல்லது மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மேற்கோள் காட்டும் கேரளா, மஹாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் கொடுக்கப்படுகிறதா என்பதை அவரே தெளிவுபடுத்த வேண்டும்.ஆனால், இதனை பாராட்ட மனமில்லாத எதிர்கட்சித் தலைவர் அவர்கள், கொரோனா காலத்திற்கு மட்டுமே வெறும் 80 யூனிட்டுகள் சலுகையாக வழங்கும் கேரளத்தைப் போன்றும், மின் கட்டணத்தில் 5-7 சதவீதம் மட்டுமே குறைத்து சலுகை வழங்கும் மகாராஷ்டிராவைப் போன்றும் தமிழ்நாட்டில் வழங்க வேண்டும் என்கிறார். தமிழ்நாட்டில் வீட்டு பயனீட்டாளர்கள் அனைவருக்கும், முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது, மேலும், 300  யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் 500 ரூபாய் செலுத்தினால் போதும். ஆனால், இதேபோல் 300 யூனிட் பயன்படுத்தும் குடும்பங்கள் கேரளாவில் 1,165 ரூபாயும், மகாராஷ்டிராவில் 1,776 ரூபாயும் கட்டணமாக செலுத்துகின்றனர். 

எனவே, தமிழ்நாட்டில் தான் வீட்டு உபயோகத்திற்கு மின் கட்டணம் மிக மிக குறைவாக உள்ளது. தமிழ்நாட்டை விட மிக அதிக வீட்டு மின்கட்டண விதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மற்றும் கேரளத்தை மேற்கோள் காட்டுவதன் மூலம் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் போராட்டம் நடத்த விரும்புகிறாரா? தமிழகத்தை விட கேரள மற்றும் மகாராஷ்டிரத்தில் அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தமிழ்நாட்டில் மாண்புமிகு அம்மாவின் அரசு தொடர்ந்து  வாரி வழங்கும் சலுகைகளை மறைத்து, பிற மாநிலங்களில் கொடுக்கப்படும் சிறிய அளவிலான சலுகைகளை பற்றி கூறுவது கனி இருப்ப காய் கவர்ந்தற்று போன்றதாகும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஈரோட்டில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது என்பது குறித்து விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார். ஆக, உண்மை இப்படி இருக்க எதிர்க்கட்சித் தலைவர் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற முதுமொழிக்கு ஏற்ப தற்போது அவர் பேசியுள்ளது அவருடைய மலிவான அரசியலை காட்டுகின்றது. உங்கள் ஆட்சிக்காலத்தில் இருண்ட தமிழ்நாட்டை கண்ட மக்கள் ஒருபோதும் உங்களை நம்ப மாட்டார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதை உங்களுக்கு வெகு விரைவில் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் உணர்த்துவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.