இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவர், கஸ்துாரி ரங்கன் தலைமையிலான, 11 பேர் அடங்கிய குழு, தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 

அதில், 'நாடு முழுவதும் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படலாம்' என, பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஹிந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றோடு, ஹிந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஏதாவது ஒரு மொழியை மூன்றாவது மொழிப் பாடமாக கற்பிக்க வேண்டும் என்றும், அதில் கூறப்பட்டிருந்தது. 

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகிளம்பியது. இதனை தொடர்ந்து ஹிந்தி கட்டாய மொழிப்பாடம் அல்ல என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், தென் மாநிலங்களில் ஹிந்தி மொழியை பிரபலப்படுத்த அமைக்கப்பட்ட தக்சின பாரத் ஹிந்தி பிரசார சபா மூலம், தமிழகத்தில், ஹிந்தி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2009 - 2010 காலகட்டம் முதல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஹிந்தி பிரசார சபா மூலம் நடக்கும் ஹிந்தி தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திலிருந்து 5.7 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தை போன்று, வேறு எந்த தென் மாநிலங்களிலும் ஹிந்தி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றும் தக்சின பாரத் ஹிந்தி பிரசார சபா தெரிவித்துள்ளது..

பள்ளிகளில் ஹிந்தி மொழி படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வை அதிகம் பேர் எழுதுகின்றனர். பிப்ரவரி மாதம் நடக்கும் தேர்வை 30 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர். ஜூலை மாதத்தில் நடக்கும் தேர்வை 10 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். 

இது தமிழ் மற்றும் ஆங்கிலம் படிப்பதால் மட்டும் போதாது. ஹிந்தியையும் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என பெற்றோர் விரும்புவதை காட்டுகிறது என தக்சின பாரத் ஹிந்தி பிரசார சபா தெரிவித்துள்ளது.