நிவர் புயல் காலத்தில் அவசியமற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதன்படி 24-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை பெரும் மழையும் புயலும் வீச இருப்பதால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மக்கள் வெளியே ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ்கள் மற்றும் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்தியாவசிய பொருட்களான பேட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டுகள், போதுமான பேட்டரிகள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் கம்பிகள், தெருவிளக்கு கம்பங்களில் மின்மாற்றிகள் ஆகியவற்றிற்கு மிக அருகில் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் மின் சாதன பொருட்களையும் கவனமாக கையாள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும்போது பொருட்கள் நகரவும், மரங்கள் விழுகவும் வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி மூலம் இயங்கும் வானொலி பெட்டி மூலம் அறிவிக்கப்படும் வானிலை நிலவரங்கள் கேட்டு தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியில் குடிசைகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.