மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 4-வது கட்டமாக சேலத்தில் இன்று பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். இது மக்களின் முகமும், ஆசியும் மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறது. இங்கு வந்துள்ள தொண்டர்கள் ஒவ்வொருவரும் 100 நபர்களை சந்தித்து பேசினாலே போதும், நாளை நமதே. நம்முடைய கதை தொடங்கும், அவர்களுடைய கதை முடியும். இது நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன்.

 
இனிவரும் 10 ஆண்டுகள் தமிழகத்துக்கு புத்துணர்வு தரும் ஆண்டாக இருக்கும். மக்கள் நீதி மய்யம் நேர்மையான திட்டங்களை வகுத்து பொதுமக்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடும். ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே, நிச்சயம் நமதே. நான் செல்லும் இடங்களில் எல்லாம் தாய்மார்களும், இளைஞர்களும் கூடி வந்து வாழ்த்துகிறார்கள். இதனுடைய அர்த்தம் என்ன? தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி விட்டது என்றுதானே அர்த்தம்.
நல்லாட்சி மலர நல்லவர்கள் தேவை. எனக்கு வரும் கூட்டத்தைப் பார்த்து சினிமாக்காரனை பார்க்க வந்த கூட்டம் என்று கூறுகிறார்கள். ஆனால், நீங்கள் மாற்றத்தைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். தமிழகத்தின் அவலங்களையெல்லாம் மாற்ற வேண்டும். அதற்கான செயல் திட்டங்களை நான் வைத்திருக்கிறேன். பொதுமக்கள் நிச்சயம் நீங்கள்தான் வருவீர்கள் என என்னிடம் கூறுகிறார்கள். இதனால் எனக்கு நம்பிக்கை வருகிறது. நாளை நமதே ஆகட்டும்.” என்று கமல்ஹாசன் பேசினார்.