தமிழகத்தை ஆளலாம் என்று சிலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆசைக் கனவு ஒருபோதும் நிறைவேறாது என துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தமாகா தலைவர் வாசன், தமிழக அமைச்சர்கள் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பல் வலி காரணமாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை. நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது:
ஒருவர் தான் சம்பாதிக்கிற லாபத்தில் ஏழை எளியவர்களுக்கு  உதவிகள் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஜெயலலிதாவும் அதைத்தான் சொன்னார், அதைத்தான் செய்தார். இஸ்லாமியர்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் செய்யாத நன்மைகளே கிடையாது.


சில நேரங்களில் பொய்யை உண்மை என நம்பி விடுகிற வேதனையான விஷயமும் நடந்துவிடுகிறது. பாலைவனத்தில் கடும் வெயிலில் தண்ணீர் தாகத்தோடு நடந்துசெல்பவர்களுக்கு துாரத்தில் தண்ணீர் இருப்பது போல கண்ணுக்குத் தெரியும். ஆனால், அங்கு போய் பார்த்தல்தான், அது வெறும் கானல் நீர் என்பது புரியும். அதிமுக எப்போதுமே தாகம் தீர்க்கும் தண்ணீராக உள்ளது. இதை மக்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைதான் 9 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன. 
தமிழகத்தில் எப்போதுமே ஜெயலலிதா ஆட்சி நடக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் ஒரே எண்ணம். இதை ஏற்றுகொண்டு அனைத்து சிறுபான்மையின மக்களும் அதிமுகவுக்கு ஆதரவு தந்ததை 9 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நமக்கு கிடைத்த வெற்றி எடுத்து சொல்கிறது.

 
தமிழகத்தை ஆளலாம் என சிலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆசைக் கனவு ஒரு போதும் நிறைவேறாது. ஏமாற்றுகிறவர்கள் எப்போதுமே ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். அது அவர்களுடைய இயல்பு. அதற்காக ஏமாறுகிறவர்கள் எப்போதுமே ஏமாந்துகொண்டிருக்க மாட்டார்கள். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.