அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் விவகாரம் பெரும் விஸ்வரூபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, முதல்வர், துணை முதல்வருடன் அமைச்சர்கள் நீண்ட நேரமாக மாறி மாறி ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இ.பி.எஸ் முதலமைச்சராகவும், ஓ.பி.எஸ் துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு கட்சியினர் தங்களது தேர்தல் பணிகளை செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சர்ச்சை நீடித்து வருகிறது. அமைச்சர்கள் சிலரோ, எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்த வேண்டும் எனவும், சிலர் ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்தனர்.

இதனையடுத்து, இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.  அதில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! தொடர்ந்து 3-ஆவது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே  அதிமுகவின் இலக்கு என்று கூறியிருந்தார். இதனிடையே, அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என அவரது தொகுதியான போடி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறையில் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் ஆலோசனை ஈடுபட்டனர். அதன்பின் அவர்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு சென்று ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தினர்.

இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். கூட்டம் நிறைவு பெற்று ஒவ்வொருவராக வெளியே வந்தனர். செய்தியாளர்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்ட நிலையில் மீண்டும் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம் வீட்டுக்கு சென்றனர். துணை முதலமைச்சருடனான ஆலோசனைக்குப் பின்னர், 2வது முறையாக முதலமைச்சருடன் அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனை நிறைவு பெற்ற பிறகு இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.