முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 27 மணிநேர போராட்டத்திற்கு பிறகு டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை தமிழக காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிலையில், கூட்டணியில் இருக்கும் திமுக மெளனம் காத்து வந்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரத்தைக் கைது செய்ய டெல்லியில் உள்ள அவர் வீட்டுக்கு சிபிஐ மூன்று முறை சென்று வந்தது குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியபோது, சிதம்பரம் சட்ட நிபுணர். அதை சட்டரீதியாக சந்திப்பார் என்று கூறிவிட்டு சென்றார். அதேபோல துரைமுருகனிடம் கேள்வி எழுப்பியபோதும், அவர் சட்ட நிபுணர். சட்டரீதியாக சந்திப்பார் என்று கூறினார். இந்தப் பதில்கள், ப.சிதம்பரத்தின் மீதான பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு மறைமுகமாக திமுக கொண்டாடுகிறதோ என்ற சந்தேகம் காங்கிரஸார் மத்தியிலேயே எழுந்துள்ளது. 

மேலும், எந்தப் பிரச்னைக்கும் உடனுக்குடன் கருத்துச் சொல்லும் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட பிறகும் அவர் எந்த கருத்தையும் கூறவில்லை. இதனிடையே, மு.க.ஸ்டாலின் இதுவரை தெளிவான கண்டனத்தை தெரிவிக்காமல் இருப்பது ஏன்? ஒருமுறை மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது உடனடியாக ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்தார். ஆனால், ஸ்டாலின் தற்பொழுது வரை தெளிவான கண்டனத்தை தெரிவிக்காமல்  இருக்கிறார் என கராத்தே தியாகராஜன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

இந்நிலையில், ஒரே பேட்டியில் அனைத்து சர்ச்சைகளுக்கும் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில்
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்றபோராட்டத்தில் அழைப்பை ஏற்று பங்கேற்ற கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்திருப்பது நாட்டிற்கு அவமானம் என கூறி தனது கண்டத்தை தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் கைது அரயில் பழிவாங்கும் நடவடிக்கை என்றார். மேலும், அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர் எனவும் அவரது விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.