முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விசாரணை அதிகாரியை சிகரெட்டால் சுட்டதாக பகீர் குற்றச்சாட்டை கிளப்பியுள்ளார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. 

ப.சிதம்பரம் பயங்கரவாதி அல்ல, அவர் இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தவர், அவருக்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என திருமாவளவன், எம்.பி கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ’’ என்.டி.டி.வி தொடர்பான 2000 கோடி மணி லாண்டரிங் வழக்கில் ப.சிதம்பரம் இரண்டாம் குற்றவாளி. அந்த வழக்கு பதிவு செய்த வருமானவரித்துறை அதிகாரி சஞ்சை ஸ்ரீ வத்ஸவாவை இவர் செய்த கொடுமைகள் அதிகம். விசாரணை அதிகாரி இவர் சொன்னபடி அஃபிடவிட்டில் கையெழுத்திட மறுத்ததால் சிகரெட்டால் சுடப்பட்ட சம்பவங்கள் என பல உண்டு’’ எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், ’’பாஜக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்று திமுக அண்ட் கோ புலம்புகிறது. சிந்தித்துப் பாருங்கள். திரு.மோடிஜி அவர்கள் சென்னை வந்தபோது கோபேக் மோடி என்று ஆட்டம் போட்டீர்களே? இன்று உங்களின் ஜந்தர் மந்தர் கூட்டத்திற்கு எதிராக பாஜக உங்களைப்போல் செயல்படவில்லை. பாஜக ஜனநாயகக் கட்சி’’ எனத் தெரிவித்துள்ளார்.

 

வேறொரு ட்விட்டர் பதிவில், ‘’திரு.சிதம்பரம் ஒரு கொடூரமான சர்வாதிகாரி. 1991ல் கண்டணூரில் எனது தகப்பனாரின் மாணவர் ராமசாமி அம்பலம் ஊர் முழுவதும் தாமரை வரைந்து பாஜகவிற்கு வாக்களிக்க சுவர் விளம்பரம் செய்திருந்தார். என் ஊரில் பாஜகவா? என்று கூறி அவரை அழைத்து மிரட்டி அனைத்தையும் அழிக்கச் சொன்னவர் இவர்’’ எனத் தெரிவித்துள்ளார்.