இந்தியில் மட்டுமில்லை எந்த மொழியிலும் மோடிக்கு பிடிக்காத வார்த்தை ‘காங்கிரஸ்’ தான். அந்த கட்சியை சேர்ந்த அத்தனை தலைவர்கள் மீதும் மோடிக்கு கடுப்பிருந்தாலும் ப.சிதம்பரத்துக்கும் மோடிக்கும்தான் ஏழாம் பொருத்தம். இதற்கு மூல காரணம், மோடியின் பொருளாதார கொள்கைகள் பற்றி சிதம்பரம் மிக நுணுக்கமாகவும், கூர்மையாகவும் விமர்சித்து வந்ததுதான்.

இது ‘எலிவேடட் கிளாஸ்’ என சொல்லப்பட கூடிய மெத்தப் படித்த மற்றும் வசதி  வாய்ப்புடைய மக்கள் தொகையிடையே மோடி ஆட்சி பற்றிய எதிர்மறை எண்ணத்தை உருவாக்கியது என்பார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இந்நிலையில்தான் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தியை சென்னை விமான நிலையத்தில் கைது செய்த சி.பி.ஐ. திகாரில் அடைத்தது. விசாரணைக்கு எடுத்து முடித்து பின் மீண்டும் சிறையில் அவரை அடைத்திருக்கிறது.

சிறைப்பட்டு இருக்கும் கார்த்தியை சிதம்பரம் இதுவரையில் நேரில் சென்று சந்திக்கவில்லை. ஆனால் கார்த்தியின் அம்மாவும், மிக முக்கிய வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் அடிக்கடி மகனை சந்தித்து வருகிறார்.

சிதம்பரம் ஏன் மகனை சந்திக்கவில்லை இதுவரையில்? என்பது டெல்லி காங் தலைவர்களிடையே பெரும் புதிராக இருக்கிறது. முக்கிய தலைவர்கள் இருவர் இது பற்றி சிதம்பரத்திடமே கேட்டுவிட, ‘கார்த்தியை சிறையில் கைதியாக பார்க்குமளவுக்கு எனக்கு தைரியமில்லை.

அவன் தன் கை சுத்தத்தை நிரூபித்து மிக மிக விரைவில் வெளியே வருவான். அப்போது பெருமிதத்தோடு அவரை சந்திப்பேன்.’ என்றாராம்.இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்ட் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் புள்ளிகள் சிலர் கார்த்தியை முயன்ற போது மிக கடுமையான கட்டுப்பாடுகளை சிறை நிர்வாகம் விதித்ததாம்.

இதனால் ‘கார்த்தி கைது என்பது கடைந்தெடுத்த அரசியல் பழிவாங்கலே!’ என்று குமுறிக் கொட்டுகிறது சிதம்பரத்துக்கு ஆதரவான தமிழக காங்கிரஸ் வட்டாரம்.