ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு  நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசத்துக்கும், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த மாநிலத்தில் மக்களவை மற்றும் சட்டப் பேரவை ஆகியவைகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சியைத் தந்தது சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் அதிரடியாக அரசியலில் குதித்தார். ஜனசேனா என்ற புதிய கட்சியைத் தொடங்கி பட்டையக் கிளப்பினார்.

மேலும்  மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் ஜனசேனா கட்சி அதிரடியாக களம் இறங்கியது. இந்தக் கட்சி தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு கடும் சவாலாக இருக்கும் என பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் மக்களவைக்கும், ஆந்திர மாநில சட்டப் பேரவைக்கும் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.

அதில் சட்டப் பேரவையைப் பொறுத்து ஜனசேனா கட்சி 4 இடங்களில் கூட வெற்றி பெற முடியாது என்று தெரியவந்துள்ளது. மேலும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளின் வாக்குகளை அந்தக் கட்சி பிரிக்காது என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

கருத்துக் கணிப்பு முடிவுகள் பவனின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.