அ.ம.மு.கவை தொடர்ந்து நடத்த நன்கொடை வசூலித்து கொடுக்குமாறு தினகரன் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் நெருக்கடியால் நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.கவில் ஓரம்கட்டப்பட்டதால் தனக்கென தனியாக ஒரு இயக்கம் ஆரம்பித்து அதகளப்படுத்தினார் தினகரன். கையில் இருக்கும் காசை எல்லாம் கொட்டி மேலூரில் கெத்து காட்டினார். தினகரனுக்கு திரண்ட கூட்டத்தை பார்த்து இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மூக்கின் மீது விரல் வைத்தன. ஆனால் இந்த கூட்டம் தானா சேர்ந்த கூட்டம் இல்லை, காசு கொடுத்து கூட்டப்பட்ட கூட்டம் என்று அ.தி.மு.க தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தினகரன் செல்லும் இடம் எங்கும் நிர்வாகிகள் தொண்டர்களை குவித்து தடல் புடல் வரவேற்பு கொடுத்தனர். என்னதான் தினகரன் வருகிறார் என்று தகவல் தெரிந்து சிலர் கூடினாலும் பலரை அழைத்து வருவதற்கு தேவையான வாகனங்களுக்கு நிர்வாகிகள் தங்கள் கையி இருந்தே காசை செலவழிக்க ஆரம்பித்தனர். மாவட்டந்தோறும் தினகரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான செலவும் மாவட்ட நிர்வாகிகள் தலையிலேயே விடிந்தது. துவக்கத்தில் கட்சி நிகழ்ச்சிகளுக்கு தலைமையில் இருந்து கேட்காமலேயே பணம் வந்து கொண்டிருந்தது. 

ஆனால் ஒரு கட்டத்தில் பணத்தை தண்ணி போல் செலவழிப்பதை நிறுத்துமாறு சசிகலா கூறியதால் தினகரன் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் தான் ஈரோட்டில் தினகரன் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் 100 பேர் கூட கலந்து கொள்ளவில்லை. பணம் கொடுக்கவில்லை என்றால் கூட்டம் கூடாது என்கிற நிலைமை வந்துவிட்டதால் தினகரன் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்த போது தான் நன்கொடை அவர் நினைவுக்கு வந்தது. நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல் சமயங்களில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க சார்பில் மாநிலம் முழுவதும் நன்கொடை வசூலிக்கப்படும். வசூலாகும் தொகையை அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் ஜெயலலிதாவிடமும், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினிடமும் கொடுப்பது வழக்கம். அந்த பாணியில் நன்கொடை வசூலித்து கொடுக்கும்படி தினகரன் கட்சியின் தலைமை மாவட்ட நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

 மேலும் ஒவ்வொரு மாவட்டமும் இவ்வளவு தொகை வசூலித்து கொடுக்க வேண்டும் என்று டார்கெட் பிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன் வசதியான மாவட்டச் நிர்வாகிகள் தினகரனை தனியாக சந்தித்து கட்சிக்கு நிதி கொடுக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி கொடுத்தால் தினகரனுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதுடன் ஜெயா பிளஸ் தொலைக்காட்சியிலும் அது செய்தியாக வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரளவு வசதியான மாவட்ட நிர்வாகிகள் 10 லட்சம் ரூபாயுடன் தினகரன் வீட்டில் காத்து இருக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் பதவிக்கு புதிதாக வந்த நிர்வாகிகளுக்கு எப்படி வசூல் செய்வது என்று தெரியவில்லை. மேலும் தினகரன் கட்சி என்று சென்றால் வியாபாரிகளும், தொழில் அதிபர்களும் ஏற இறங்க பார்த்துவிட்டு அப்புறம் வாருங்கள் என்று சொல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால் நிர்வாகிகள் பலரும் புலம்ப ஆரம்பித்துள்ளனர். அ.ம.மு.கவில் சேர்ந்தால் செலவுக்கு பணம் கொடுப்பார்கள் என்று பார்த்தால், நம்மிடம் பணம் கேட்கிறார்களே என்று சிலர் கூற பொறுமையாக இருங்கள் தேர்தல் நேரத்தில் லம்பாக ஒரு அமவுண்ட் வரும் என்று தலைமை கழக நிர்வாகிகள் அவர்களை அமைதிப்படுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.