குடியுரிமை திருத்த மசோதாவின்படி, கடந்த 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படமாட்டார்கள். 

அவர்கள் இந்தியாவில் குடியேறி 5 ஆண்டுகள் முடிந்தவுடன் இந்திய குடியுரிமை வழங்கப்படும். இந்த மசோதாவுக்கு ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாத மத்திய அரசு அதனை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தது. 

நேற்று நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமை மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அந்த மசோதா தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் கடுமையான விவாதம் சுமார் 12 மணி நேரம் நடைபெற்றது.


இறுதியில் குடியுரிமை மசோதா நிறைவேற்றுவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 311 பேரும் எதிராக வெறும் 80 பேர் மட்டுமே வாக்களித்தனர். இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 

மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவது பா.ஜ.க. அரசுக்கு என்பது கொஞ்சம் கஷ்டம்தான் இருந்தாலும், அ.தி.மு.க., ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பி.ஜே.டி. மற்றும் டி.டி.பி. கட்சிகளின் ஆதரவுடன் மசோதாவை நிறைவேற்றி விடலாம் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. உள்ளது.