மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், மற்றொரு தொகுதியில் போட்டியிட போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் பெரும்பாடுபட்டு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இவர்கள் களமிறங்கும் இரண்டு தொகுதியிலும் உதய சூரியன் சின்னத்திலே நிற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தங்கள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 3 தொகுதிகளில் 2 தொகுதிகளை ஒதுக்கி தருமாறு மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் பட்டியல் கொடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தற்போது சிதம்பரம் தொகுதி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. இந்த தொகுதியில் திருமாவளவன் களமிறங்குகிறார். 

மற்றொரு தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் போட்டியிடுவதற்காக விழுப்புரம் அல்லது காஞ்சிபுரம் தொகுதியை ஒதுக்குமாறு மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். ஆனால் விழுப்புரம் தொகுதி வன்னியர் சமூகத்தினர் அதிகமாக உள்ளதால், இங்கு திமுக வேட்பாளரை நிறுத்தினால் தான் வெற்றி பெற முடியும் என்று  மு.க.ஸ்டாலினிடம் பொன்முடி எடுத்துரைத்துள்ளார். ஆகையால் விழுப்புரம் தொகுதியை திமுக வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து விழுப்புரம் தொகுதி கிடைக்காவிட்டால் காஞ்சிபுரம் தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தருமாறு திருமாவளவன் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் தோல்வியடைந்ததால் இந்தமுறை காஞ்சிபுரம் தொகுதியை குறி வைத்துள்ளனர். இந்நிலையில் மற்றொரு தொகுதியில் போட்டியிட பொதுச்செயலாளர் ரவிக்குமார், சிந்தனைசெல்வன், துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, பொருளாளர் முகமது யூசுப் ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.