கஜா புயல் நிவாரணமாக 50 கோடி ரூபாய் வரை நிவாரண உதவி வழங்கியுள்ள  பாரிவேந்தர் தஞ்சாவூர் மாவட்ட மக்களிடம்  இலவச மருத்துவ சிகிச்சை அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்து போயின. இன்னும் நிவாரணப் பணிகள் அங்கு தொடர்ந்து வருகின்றன. அதேசமயத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல்வேறு இடங்களிலும் இருந்து நிவாரணப் பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், திரையுலத்தினர், தனிநபர்கள் என அனைவரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், அறிவிப்பொன்றை வெளியிட்ட எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாரிவேந்தர் “எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குக் கல்விக்கட்டணம் கிடையாது. 4 மாவட்டங்களைச் சேர்ந்த 650 மாணவர்களுக்கான 4 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் ரூ.48 கோடிக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்படும். அவர்கள் தங்களது கல்வியை முடிக்கும்வரை எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது” என அவர் தெரிவித்தார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தென்னந்தோப்புகளை இழந்த விவசாயிகளுக்கு 25,000 தென்னங்கன்றுகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். எஸ்ஆர்எம் கல்விக் குழுமம் சார்பில் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியை முதல்வரைச் சந்தித்து பாரிவேந்தர் வழங்கினார்.

புயல் பாதித்த தஞ்சாவூர் மாவட்ட மக்களிடம்  இலவச மருத்துவ சிகிச்சை அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.பாரிவேந்தர் தற்போது பாரிவள்ளலாக மாறிவிட்டார் என சமூகவலைதளங்களில் வாழ்த்து குவிந்து வருகிறது.