paridhi elam vazhudhi about ops
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ஓ.பி.எஸ். அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியை உருவாக்கினார். இதையடுத்து அவருடன் முன்னாள் அமைச்சர்கள், 11 எம்எல்ஏக்கள் இணைந்தனர். இதையடுத்து எடப்பாடி அணியில் 122 எம்எல்ஏக்கள் இருந்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றார்.
இதற்கிடையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கிலும், டிடிவி.தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிலும் சிறை சென்றனர். இந்த வேளையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இரு அணிகளும் மீண்டும் இணைவதாக பேசப்பட்டது. ஆனால்,இதுவரை அதற்கான பேச்சு வார்த்தை நடக்கவில்லை.

முன்னதாக ஓ.பி.எஸ். அணியில் இருந்த பரிதி இளம்வழுதி, திடீரென டிடிவி.தினகரனை சந்தித்து, அவருடன் இணைந்துள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்த பின்னர், பரிதி இளம்வழுதி செய்தியாளர்களிடம் கூறியதாவது.
நான், டிடிவி.தினகரன் அணியில் இணைந்து கொள்ளவே வந்தேன். வரும் காலத்தில் தமிழகத்தை வழி நடத்துபவரை சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி.
ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்து 3 நாட்கள் மட்டுமே இருந்தேன். அதன் பின்னர், அங்கிருந்து பிரிந்துவிட்டேன். ஓபிஎஸ்சின் போக்கு சரியில்லை. அவரிடம் உள்ள நடிப்பை கண்டு ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன்.
சிவாஜி தான் பெரிய நடிகர் என்பார்கள். ஆனால், அவரை தாண்டிய நடிகன் ஓபிஎஸ் தான். உடல்நிலை காரணமாகவும் விலகி இருந்த நான், தற்போது டிடிவி தினகரனை சந்தித்துள்ளேன். கட்சியை வலுபடுத்த ஒருவர் தேவை. அவர் டிடிவி தினகரன் மட்டுமே.

இரு அணிகளும் இணையும் என்று பேசுகிறார்கள். அப்படி இணையும்போது பார்க்கலாம். கீரியையும், பாம்பையும் சண்டை விடுவதுபோல் சொல்வார்கள். ஆனால், விட மாட்டார்கள். அதேபோல் இவர்கள் பேச மாட்டார்கள்.
ஓபிஎஸ் அணியிலிருந்து 10 பேர் நீக்கப்பட்டனர். அதில் நான் முதலில் வந்துள்ளேன். என்னை தொடர்ந்து டிடிவிக்கு ஆதரவாக பலர் வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
