நான் தொட்டால் தினகரன் எங்கு சென்று விழுவாரோ தெரியாது என மிரட்டல் தொனியில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்று பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற்று ஆண்டிப்பட்டி தொகுதி முதல் இடத்தை பெறும் என்றார். ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கத்தமிழ்ச்செல்வன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகு ரூ.1088 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆண்டிபட்டியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை என தங்கத்தமிழ்ச்செல்வன் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 4 பேர் தன்னை சந்திக்க தூதுவிட்டதாகவும், திமுகவில் சேர்ந்துள்ள செந்தில்பாலாஜி அதிமுகவில் இணைவதற்கு மனு அளித்துள்ளதாகவும், பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

2007-ம் ஆண்டு ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர் தினகரன். 10 வருடங்களாக ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை, ஜெயலலிதாவை பார்க்க ஒரு முறை கூட வரவில்லை. ஆனால் அவர் இறந்தவுடன் வந்து சேர்ந்து கொண்டார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்து வந்தார். அப்போது நாம் தாடி வைத்துக்கொண்டு கோவிலில் பிராத்தனை செய்துகொண்டிருந்தோம். மாநிலம் முழுவதும் பிராத்தனைகள் நடைபெற்று வந்தன. ஆனால் தினகரனோ பாண்டிச்சேரியில் இருந்து வந்தார். அவருக்கு ஜெயலலிதா மேல் அக்கறை இல்லை. தற்போது அக்கறை இருப்பது போல் பாவனை காட்டி வருகிறார். 

அதிமுகவில் இருந்து ஏன் தினகரன் நீக்கப்பட்டார் என்பது எனக்கும் ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் தெரியும் என்றார். அ.தி.மு.க அழிந்துவிடும் என்கிறார். என்னென்னமோ பேசுகிறார். அவர் பேசியதற்கு எல்லாம் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். மீண்டும் மீண்டும் என்னை தொடுகிறார். நான் தொட்டால் அவர் எங்கு சென்று விழுவாரோ தெரியாது என ஆவேசத்துடன் பேசியுள்ளார்.