அதிமுக, இரட்டை இலை, ஆட்சி என மூன்றையும் கைப்பற்ற போவது யார் என்ற ஆட்டம் சசிகலாவுக்கும், பன்னீருக்கு இடையே தொடங்கி அது எடப்பாடி வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சசிகலாவும், தினகரனும் சிறைக்கு சென்ற பின்னர், இரு அணிகளுக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு ஒன்று பட்ட அதிமுக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இரு அணிகளையும் இணைப்பதற்காக தொடங்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும், வின்னர் படத்தில் கைப்பிள்ளையாக வரும் வடிவேலு சொல்வது போல பேச்சு, பேச்சாகவே இருக்கிறது.

சசிகலா குடும்பத்தை அதிகாரபூர்வமாக அரசியலை விட்டு நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை என, பன்னீர் தரப்பு முன் வைத்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்க முடியாத நிலையில் எடப்பாடி தரப்பினர் உள்ளனர்.

இதனால், அதிமுக தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதுடன், ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்கும் வகையிலும், இன்று முதல் தமது, தமிழகம் தழுவிய  சுற்று பயணத்தை தொடங்கி விட்டார் பன்னீர்செல்வம்.

ஏற்கனவே, சசிகலா பொது செயலாளர் ஆனதை விரும்பாத அதிமுக தொண்டர்கள் பலர், பன்னீரின் பக்கம் சாய்ந்து விட்டனர். பெரும்பாலான எம்.எல்.ஏ க்கள், எம்.பி. க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவு மட்டுமே தற்போது, ஆளும் எடப்பாடி தரப்புக்கு உள்ளது.

இந்நிலையில், தமது சுற்று பயணத்தின் மூலம், தமது தரப்பை மேலும் பலவீனப்படுத்தி, இருக்கும் கொஞ்ச, நஞ்ச தொண்டர்களையும் பன்னீர் வளைத்து விடுவார் என்ற அச்சம் முதல்வர் எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால், தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொது கூட்டங்கள் நடத்தப்படும் என்று எடப்பாடி அறிவித்துள்ளார். அந்த கூட்டங்களில், பன்னீரை பற்றிய குற்றச்சாட்டுகள்  பிரதானமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதற்காக, பன்னீர் முதல்வராகவும், அமைச்சராகவும் இருந்த போது, சட்ட விதிகளை வளைத்து அவரும், அவரது குடும்பத்தினரும் கோடிக்கணக்கில் சேர்த்த சொத்துக்கள் மற்றும்  செய்துள்ள முதலீடுகள் பற்றிய தகவல்கள் எடப்பாடி தரப்பினரால் ஆதாரத்துடன் திரட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, ஏலக்காய் வரியை குறைக்க உத்தரவிட்டு அதன் மூலம் பெற்ற பலநூறு கோடி ரூபாய், வெளிநாட்டு படங்களின் விநியோக உரிமையை, அவரது மூத்த மகனுக்கு பெற்று தந்தது உள்ளிட்ட ஆவணங்கள், தற்போது  எடப்பாடி தரப்பினரின் கைவசம் உள்ளது.

இந்நிலையில், சுற்று பயணம் மேற்கொள்ளும் பன்னீர்செல்வம், எடப்பாடி தரப்பை விமர்சித்து பேசினால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொது கூட்டங்களில், மேற்கண்ட குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தும் திட்டத்துடன் காத்திருக்கிறது எடப்பாடி தரப்பு.

இதனால், பன்னீருக்கு, எடப்பாடிக்கும் இடையே ஏற்பட்டுள்ள "நீயா நானா" ஆட்டத்தில் "ஜெயிக்க போவது யாரு?" என்ற கேள்வியே மக்கள் மன்றத்தில் எழுந்துள்ளது.