*    ஜெயலலிதா மறைந்தபோது மோடி நமக்கு ஆதரவாக இருந்தார். மத்திய அரசு நம்முடையை துயரத்தில் பங்கெடுத்தது. நமக்கு தோள் கொடுத்து துணையாக இருந்தது: ஓ.பன்னீர் செல்வம். 

(டியர் டெபுடி! நமக்கு ஆதரவாக இருந்தார்ன்னு சொல்லாதீங்க...உங்களுக்குன்னு ஆதரவா இருந்தார்னு சொல்லுங்க. மத்திய அரசு எப்படி தோள் கொடுத்துச்சுன்னுதான் பார்த்தோமே! வித்யாசாகர் ராவ் உங்க கையை பிடிச்சு, எடப்பாடியார் கையில் கொடுத்து கண் கலங்கிய அந்த காட்சியை தமிழக அரசியல் வரலாறு மறக்குமா? இல்ல மன்னிக்குமா?)

*    பா.ஜ.க.வின் துணை அமைப்பாக மாறிவிட்ட அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு  இனி இல்லை. மதசார்பற்ற தன்மை கொண்ட கூட்டாட்சி தலைமையில்தான் மத்தியில் ஆட்சி அமையும்: செ.கு.தமிழரசன். 
(இப்போல்லாம் அ.தி.மு.க. ஆட்டத்துல உங்களை யாரும் சேர்த்துக்கிறதில்லை, எதிர்காலத்துல சட்டமன்ற தேர்தல்ல ஒரு சீட் கூட கிடைக்க வழியில்லை! அப்படிங்கிறதை எல்லாம் செமத்தியா கணிச்சுட்டு, சட்டுபுட்டுன்னு இடத்த காலி பண்ணுறீங்க பாருங்க, நீங்க கில்லி தல. அ.தி.மு.க.வோட மதசார்பு பற்றி ஜெ., இருக்கும்போதே பேசியிருந்தால் நீங்க கெத்து. ஆனா அப்போவெல்லாம் சபாநாயகர் இருக்கை வரைக்கும் உட்கார்ந்து அதிகாரத்த அனுபவிச்சுட்டு, இப்போ தி.மு.க - காங்கிரஸ் நோக்கி சீன் போடுறது அவ்ளோ நல்லாவா இருக்குது?)

*    தேர்தலுக்காக, நேரடியாக இல்லாமல் அரசு இயந்திரம் மூலமாக ரூபாய் ரெண்டாயிரத்தை மக்களுக்கு கொடுத்து வாக்குக்கு விலை பேசுகின்றது இந்த அரசு. சந்தர்ப்பவாத பா.ஜ.க. பா.ம.க. அ.தி.மு.க. கூட்டணியானது 40 இடங்களிலும் தோற்கும்: நாஞ்சில் சம்பத்
(அவிய்ங்க சந்தர்ப்பவாத கூட்டணி, ஓ.கே. அப்படியே நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு கொஞ்சம் வெளிப்படையா சொல்லிங்கண்ணே! அ.தி.மு.க. கூட்டணியை நீங்க திட்டுறதுக்கு நின்னுட்டு இருக்கிற மேடை, ஸ்டாலினோட பிறந்தநாள் கொண்டாட்ட விழா மேடை. ம.தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க.ன்னு ரகம் ரகமான மேடைகளில் நின்னப்ப நீங்க ஸ்டாலினை கிழி கிழின்னு கிழிச்சதும், இன்னைக்கு அவர் பிறந்த நாளை நீங்களே கொண்டாடுறதும் சந்தர்ப்பவாதம் இல்லாமல் கத்திரிக்கா ரசமா?)

*    ஜெயலலிதா இருந்த போது கூட்டணிக்காக அ.தி.மு.க.வை தேடி பல கட்சிகள் வரும். ஆனால் இப்போது இவர்கள் மற்ற கட்சிகளை தேடி போகிறார்கள்! என்று பத்திரிக்கைகள் எழுதுகின்றன. அப்போது இருந்த அரசியல் சூழ்நிலை வேறு, இப்போது உள்ளது வேறு: ஜெயக்குமார். 
(உங்க கட்சியோ கெத்து காணாமல் போச்சுங்கிற உண்மையை கொஞ்சம் கூட தயக்கமேயில்லாம பொசுக்குன்னு போட்டு உடைச்சீங்க பாருங்க, நீங்க கெத்து தல. இதைவிட இன்னும் சிறப்பாக, அன்றைக்கு அ.தி.மு.க. சிங்கம் போல் இருந்தது, இன்றைக்கு! அத ஏன் நம்ம வாயால சொல்லிக்கிட்டு  விடுங்க தல விடுங்க.)

*    தி.மு.க.வினருக்கு கொடுக்கும் பழக்கமே கிடையாது. இது அவர்களின் கொள்கை முடிவு பிச்சைக்காரர்கள் கூட அ.தி.மு.க.காரர்களை பார்த்துதான் பிச்சை கேட்பார்கள்: ராஜேந்திர பாலாஜி. 
(அத்தனை கொடுங்க, இத்தனை கொடுங்கன்னு தொகுதிகளுக்காக கூட்டணி பஞ்சாயத்து போயிட்டு இருக்கிற நேரத்துல இப்படியா சார் ‘பிச்சைக்காரன் கூட எங்களை பார்த்துதான் கேட்பான்’ன்னு பேசுறது? கூட்டணி கட்சிகள் என்னமோ அவங்களைத்தான் நீங்க சிலேடையா திட்டுறீங்களோ?ன்னு கோவிச்சுக்க மாட்டாங்களா! இதையும் மேலே இருக்கிறவரு பார்த்துப்பாரா மினிஸ்டர் சார்?)