ஓ.பி.எஸ்சை கடந்த ஆண்டு சந்தித்தது குறித்து தன்னிடம் உடனடியாக தெரிவிக்காதது ஏன் என்று சசிகலா தினகரனிடம் கோவப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பி.எஸ் – தினகரன் சந்திப்பு ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு மட்டும் அல்ல தினகரன்ஆதரவாளர்களுக்குமே மிக பயங்கர அதிர்ச்சி தான். என்ன தான் தினகரன் தன்னுடைய நிர்வாகிகளுடன் கலந்து பேசிவிட்டு சென்றே சந்தித்ததாக கூறினாலும், உண்மையில் சந்திப்பு குறித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தினகரன் வாய்திறந்துள்ளார். இதனை வைத்தே தற்போது தமிழக அரசியல் சுழல ஆரம்பித்துள்ளது. 

இந்த நிலையில் தினகரன் – ஓ.பி.எஸ் சந்திப்பு குறித்த தகவலை சிறையில் நேற்று காலையில் செய்தித்தாள்களை புரட்டிய போது தான் சசிகலாவுக்கு தெரியவந்துள்ளது. அதற்கு முன்பாக அவருக்கு அதைப்பற்றிய தகவல் சென்று சேரவில்லை என்று கூறப்படுகிறது. செய்தித்தாள்களிடம் தினகரனை சந்தித்ததை ஓ.பி.எஸ்சும் ஒப்புக் கொண்ட தகவல் குறித்து படித்ததும் சசிகலாவுக்கும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்துள்ளது.

 

தனக்கு எதிராக செயல்பட்டு வரும் ஓ.பி.எஸ்சை தன்னிடம் கூறாமல் தன்னால் பொறுப்பு வழங்கப்பட்ட தினகரன் சந்தித்ததை சசிகலாவால் ஜீரனித்துக் கொள்ளவே முடியவில்லையாம். மேலும் இந்த சந்திப்பு குறித்து இத்தனை நாட்கள் தன்னிடம் சொல்லாதது ஏன் என்றும் சசிகலா யோசிக்க ஆரம்பித்துள்ளார். என்ன தான் சசிகலாவிடம் தெரிவித்துவிட்டே தான் ஓ.பி.எஸ்சை சந்திக்க சென்றதாக தினகரன் கூறினாலும் அதில் உண்மை இல்லை என்றே சொல்லப்படுகிறது. 
 
இதனிடையே பெங்களூர் சென்ற தினகரன் சசிகலாவை சந்தித்தாகவும் அப்போது தன்னிடம் ஏன் ஓ.பி.எஸ் சந்திப்பு தொடர்பாக முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றும் சசிகலா கோபத்துடன் கேட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு சந்திப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட பலன்கள் குறித்த ரகசியத்தை கூறி சசிகலாவை தினகரன் சமாதானம் செய்ததாக சொல்லப்படுகிறது.