ஜெயலலிதா  ஆட்சியில் இருந்தபோது அதிமுக  அவைத் தலைவராக மதுசூதனனும்  பொருளாளராக  பன்னீர் செல்வமும்  பதவி வகித்தனர்.

ஆனால் அவரின் மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற சசிகலா பன்னீர்செல்வத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தினார்.

இதனால் பதவி விலகிய பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினார். ஒபிஎஸ்க்கு ஆதரவாக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் துணை வந்தார். அப்போது அவைத்தலைவரும் பொருளாளரும் இங்கே தான் இருக்கிறோம் எனவும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் பன்னீர் செல்வம் கூறி வந்தார். 

தொடர்ந்து கடந்த ஆறு மாதத்திற்கு பிறகு பன்னீர்செல்வம் சசிகலாவால் நினைக்கப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற எடப்பாடியுடன் கைகோர்த்துள்ளார்.

இதனால்  பன்னீர் செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவியும் அவருடன் இருந்த பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் அவைத் தலைவராக இருந்து பன்னீர் செல்வத்துடன் வெளியேறிய மதுசூதனனுக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை.

இந்நிலையில்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுசூதனன் இல்லத்திற்கு திடீர் வருகை புரிந்தார். அப்போது மதுசூதனின் மனைவி ஜீவா அவர்களின் உடல் நலம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதை தொடர்ந்து மதுசூதனுடன் ஓ.பன்னீர்செல்வம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஜெ.சி.டி.பிரபாகரன், ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தார்.

இரு அணிகள் இணைப்பிற்கு பிறகு கட்சியின் மூத்த நிர்வாகியான மதுசூதனை அவரது இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும்.