துரோகக் கும்பலின் தலைவராக தீயநெஞ்சு தினகரன் இருக்கிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

சென்னை ராயப்பேட்டையில் நடந்த விழாவில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் அதிமுகவில் நேற்று இணைந்தனர். விழாவுக்கு கரூர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியில் சுமார் 3,000 பேர் இணைந்தனர். விழாவில்  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:

அதிமுக தொண்டர்களால் தொடங்கப்பட்டு, தொண்டர்களே தலைமையேற்று, தொண்டர்களால் வழி நடத்தப்படும் இயக்கம் ஆகும். ஜெயலலிதா மறைவுக்குப் பின், இந்த இயக்கத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும். கபளீகரம் செய்து விட வேண்டும் என்று ஒரு குடும்பம் செயல்பட்டது.

ஜெயலலிதா வாழ்ந்த போதும், மறைந்து நினைவில் வாழும் போதும், துரோகம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டது அந்தக் குடும்பம்.அந்த துரோகக் கும்பலின் தலைவராக தீயநெஞ்சு தினகரன் அதிமுகவை ஒட்டு மொத்தமாக விழுங்கிட முழு முயற்சி மேற்கொண்டார். ஆனால் அந்த எண்ணத்தை தகர்ந்தெறிந்து, சுயநலக் கும்பலின் ஆசைக் கனவுகளை பொடிப் பொடியாக்கி, ஒற்றுமை காத்து, அந்த குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கி விடாமல் மீட்டெடுத்து, இன்று தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்கமாக அதிமுக நடை போட்டுக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல்,உள்ளாட்சி மன்றங்களின் தேர்தல் என்று ஏராளமான பணிகள் நம் கண் முன்னே காத்திருக்கின்றன. கட்சியில் இணைந்திருக்கும் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு. எதிர் வரும் தேர்தல் எதுவாயினும் அதில் மகத்தான வெற்றி பெற்று, ஜெயலலிதாவுக்கு நன்றிக் காணிக்கையாக செலுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.