சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பேச திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுல்தான்பேட்டை பகுதிக்கு சென்றிருந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். கூடியிருந்த (அ) கூட்டப்பட்டிருந்த மக்களின் நடுவே உரையாற்றினார். 

அப்போது....”ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் ரேஷன் கார்டுகளுக்கு, ரூபாய் ரெண்டாயிரம் வழங்கும் நடவடிக்கைக்கு தி.மு.க.வினர் தடையாணை பெற்றனர். தேர்தல் முடிந்ததும் அந்த பணம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டாலின் முதல்வராகும் கனவு என்றுமே பலிக்காது. அ.தி.மு.க. ஆலமரம் போன்று பல லட்சக்கணக்கான தொண்டர்களான் விழுதுகளுடன் உள்ளது.” என்று பேசினார். 

மீண்டும் அந்த ரெண்டாயிரம் ரூபாய் விஷயத்தை கையிலெடுத்திருக்கும் துணைமுதல்வரை, சோஷியல் மீடியாக்களில் போட்டு வெளுக்கின்றனர் இளைஞர்கள். அதில் “ஜெயலலிதா இருக்கும்போது சில நேரங்களில் நீங்க முதல்வராகி இருக்கீங்க. அப்பல்லாம் உங்களைப் பார்க்குறப்ப ‘ஒரு சாமானியனும் இப்படி உச்சம் தொடலாம்!’ன்னு பெருமையா இருக்கும். 

ஆனால் தர்மயுத்தத்தை கைவிட்டுட்டு கேவலம் பதவிக்காக நீங்க ஆளும் அணியில் இணைந்ததும், அந்த யுத்தத்தில் உங்களோடு நின்ற பலரை கண்டுக்காமல் விட்டதும், உங்க மகனுக்கு தேனியில் எம்.பி. சீட் வாங்கி கொடுத்ததும், தமிழகத்திலேயே தேனி தொகுதியில்தான் அதிகளவு ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்று வெடித்திருக்கும் விமர்சனமும், போலீஸ் துணையுடன் உங்க ஆளுங்க தேனி தொகுதியில் வாக்குக்கு பணம் கொடுக்கும் உண்மையை சொல்லும் வீடியோக்களும்...உங்க மேலே இருந்த மரியாதையை, பெருமிதத்தை, பேரன்மை சிதைச்சு அசிங்கப்படுத்திடுச்சு. 

இப்ப மறுபடியும் பணம் கொடுக்கிற பேச்சை துவக்கிட்டீங்க. ஒண்ணு ஓட்டு போடப் போக பணம் கொடுப்பீங்க, இல்லேன்னா ஏழை தமிழன் சும்மா வீட்டுல முடங்கிக் கிடக்க பணம் கொடுப்பீங்க.

ஆக மொத்தத்துல பணம், பணம், பணம் இவ்வளவுதான் நீங்க. இல்லையா மிஸ்டர் பன்னீர்செல்வம்? எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரியாக இருந்த உங்க தலைவியின் கடைசி கால கதை தெரிந்துமேவா உங்க கட்சிக்காரங்க இன்னும் பணத்தைக் கட்டிக்கிட்டு ஆடுறீங்க?” என்று வெளுத்திருக்கின்றனர். 
கேக்குதா ஜி?