Paneer-edapadi After the judgment fire flaming AIADMK
பாகுபலி ஸ்கிரிப்டின் கடைசி சீனுக்கு மணிரத்னம் வசனம் எழுதியது போல், வெகு வெகு சிம்பிளாக பன்னீர் டீமுக்கு எதிரான பெரும் வழக்கை (இப்போதைக்கு) முடித்து வைத்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம். ’வழக்கு தள்ளுபடி’ எனும் வார்த்தையை இம்மாம் பெரிய வாத, விவாத இழுவைக்குப் பின் உச்சஸ்தாயில் உதிர்த்திருக்கிறது நீதிமன்றம்.

பன்னீர், மா.ஃபா.பாண்டியராஜன் உள்ளிட்ட அரசுக்கு எதிராக வாக்களித்த பதினோறு பேரும், வாக்கெடுப்பை புறக்கணித்து எஸ்கேப் ஆன பி.ஆர்.ஜி.அருண்குமாரும் இந்த வழக்கு சேற்றில் சிக்கி தகுதி இழப்பர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜஸ்ட் லைக் தட் ஆக வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றத்துக்கு வெளியே தள்ளிவிட்டிருக்கிறது நீதிமன்றம்.
தாங்கள் தப்பிப் பிழைத்திருப்பதை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறது பன்னீர் தரப்பு. ஆனால் அதேவேளையில் அ.தி.மு.க.வை சேர்ந்த எதிரணியோ இதற்காக மகிழவும் இல்லை, கொண்டாடவும் இல்லை என்று தகவல்கள் தடதடக்கின்றன.

என்னதான் பன்னீர் மற்றும் எடப்பாடி இரு அணிகளும் இணைந்துவிட்டாலும் கூட, துணை முதல்வர் எனும் பதவியை பெற்று அமைச்சரவையிலேயே பன்னீர் ஐக்கியமாகிவிட்டாலும் கூட இரு அணிகளுக்குள்ளும் மன ரீதியிலான பிணைப்பு உருவாகவில்லை. இதைத்தான் பன்னீரின் வலது கரமான மைத்ரேயன் வெளிப்படையாக சமூகவலைதளத்தில் எழுதினார்.
அரசு விழாக்களில் பன்னீர்செல்வத்தை முன்னிலைப்படுத்தவில்லை என்றெல்லாம் அவரது ஆட்கள் புகார் கிளப்பினார்கள். இரு தரப்பும் அக்னி நட்சத்திர பிரபு-கார்த்திக்காகவே திரிந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தி.மு.க.வினால் போடப்பட்ட, பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடிய வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக நாள்குறிக்கப்பட்டது. துணைமுதல்வரின் பதவி சம்பந்தப்பட்ட, கட்சி மற்றும் ஆட்சியின் எதிர்காலம் குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டென்று கிளம்பி தன் சொந்த ஊரான சேலம் சென்றுவிட்டார். இது பல வகையான யூகங்களை கிளப்பியது.
குறிப்பாக அ.தி.மு.க.வின் ஒரு தரப்பே ”பிரதமர் சொன்னதால்தான் துணைமுதல்வர் பதவியை பெற்றேன். நான் பதவிக்கு ஆசைப்படுபவன் அல்ல. என்னை கோபப்படுத்தினால் இன்னும் பல உண்மைகளை வெளியிடுவேன்! என்று பன்னீர்செல்வம் பேசியது பிரதமர் தரப்பை ஆத்திரப்படுத்தி, ஆட்சியின் ஆட்டத்துக்கு வழி செய்தது. இந்த வகையில் எடப்பாடியாருக்கு பன்னீர் மேல் பெரும் ஆதங்கம் வெடித்தது. தான் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் ஆட்சியை ஒழிக்க பன்னீர் முயல்கிறார்! என்றே எடப்பாடியா நினைத்தார்.அதன் பிறகு சமீபம் வரையில் பல நிகழ்வுகளில் இரு தரப்பும் முட்டிக் கொண்டுதான் இருக்கின்றன எங்கள் கட்சிக்குள்.

இந்நிலையில் இந்த தீர்ப்பின் மூலம் பன்னீர் தகுதி நீக்கம் செய்யப்படுவார், அரசு அதிகாரத்திலிருந்து சட்ட ரீதியாய் ஒதுக்கப்படும் அவர் கட்சியில் மட்டுமே ஒருங்கிணைப்பாளராக தொடர்வார் அதன் பின் பன்னீர் டீமை உள் நெருக்கடி கொடுத்து மெதுவாக கட்சியிலிருந்தே வெளியேற்றிவிடலாம்! என்று எதிரணி நினைத்தது.
ஆனால் வழக்கு தள்ளுபடியானதன் மூலம் அவர்களின் எண்ணம் தவிடு பொடியாகி இருக்கிறது. இந்த தீர்ப்பானது பன்னீருக்கு இப்பவும் டெல்லியின் ஆதரவு இருப்பதை உறுதி செய்திருக்கிறது.
ஏதேதோ எதிர்பார்த்த எடப்பாடி தரப்புக்குதான் ஏமாற்றம் பாவம்.” என்கிறார்கள்.
இதெல்லாம் நெசந்தானா?! என்பதே அப்பாவி அ.தி.மு.க. தொண்டனின் கேள்வி.
