palanisamy explained about stalin phone call
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதற்கு நான் அளித்த பதிலை விடுத்து, ஒருதலைபட்சமாக திமுக நேற்று அறிக்கை வெளியிட்டதாக முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 19,500 வழங்க வேண்டும், ஓய்வூதியம், பணிக்கொடை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும், வருங்கால வைப்புத்தொகையை உரிய கணக்கில் சேர்க்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த 7000 கோடி நிதியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
13வது ஊதிய ஒப்பந்தத்தில் 2.57 மடங்கு ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.44 மடங்கு என்ற ஊதிய உயர்வு வழங்குவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சில மறுத்துவிட்டன. சில சங்கங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால், தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சங்கங்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் தடை மற்றும் எச்சரிக்கையை மீறி 4வது நாளாக இன்றும் வேலைநிறுத்தம் நடைபெற்றுவருகிறது. இதனால் பொதுமக்களும் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, முதல்வர் பழனிசாமியை நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு ஸ்டாலின் பேசினார். போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, மக்களின் படும் அவதியை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பதிலளிக்கவில்லை எனவும் திமுக அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதை மட்டும் வெளியிட்டு அறிக்கை வெளியிட்ட திமுக, அதற்கு நான் அளித்த பதிலை வெளியிடவில்லை. நான் தெரிவித்த விளக்கத்தை மறைத்து திமுக அறிக்கை வெளியிட்டதை இன்று செய்தித்தாளில் படித்து தெரிந்துகொண்டேன். திமுக ஒருதலை பட்சமான அறிக்கை வெளியிட்டதாக முதல்வர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
