palanisamy clarified about his symbol opinion

பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்வியின் அடிப்படையிலேயே இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக கருத்து தெரிவித்ததாக முதல்வர் விளக்கமளித்துள்ளார்ர்.

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், பழனிசாமி மற்றும் தினகரன் ஆகிய தரப்புகளின் வாதங்களைக் கேட்டறிந்த தேர்தல் ஆணையம் இன்று இறுதிமுடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம், முதல்வர் பழனிசாமி அணிக்கு ஒதுக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அத்தகவலை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமியிடம் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 90% எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், கட்சி நிர்வாகிகள் தங்கள் அணியில் உள்ளதாலும் தேர்தல் ஆணையத்திற்கு தேவையான அனைத்து பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்ததாலும் நியாயமான முறையில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் தங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வராதநிலையில், சின்னம் தங்களுக்கு நியாயத்திற்கு கிடைத்த வெற்றி என முதல்வர் தெரிவித்தது விமர்சனத்துக்குள்ளானது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்து முதல்வர் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதில், மத்திய அமைச்சர் நிதின் கத்கரியுடன் ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததால், சின்னம் ஒதுக்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறித்து முதல்வருக்கு தெரியாது. எனினும் இரட்டை இலை சின்னம் முதல்வர் அணிக்கு ஒதுக்கப்பட்டதாக செய்தியாளர்கள் கூறியதன் அடிப்படையிலேயே, முதல்வர் கருத்து தெரிவித்தார். செய்தியாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலோடு சின்னம் ஒதுக்கப்பட்டது தொடர்பான கேள்வி எழுப்பினர். அதனால்தான் முதல்வர் கருத்து தெரிவித்ததாகவும், கூட்டத்திற்குப் பின்னர் வெளியே வந்தவுடன் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத தகவல் தெரியும் எனவும் முதல்வர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.