ஐ.என்.எக்ஸ்.  மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் முன் ஜாமீன் பெற்று வந்தார். இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று சிபிஐயும் அமலாக்கத்துறையும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டன. 

அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம்  ப.சிதம்பரத்தின் முன் ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கைகளை சிபிஐயும் அமலாக்கத்துறையும் தொடங்கின. ப. சிதம்பரத்தை கைது செய்ய டெல்லியில் உள்ள அவருடைய  இல்லத்துக்கு அதிகாரிகள்  அவர் இல்லாததால் திரும்பிச் சென்று விட்டனர்.

ஆனால் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க உச்ச நீதிமன்றத்தை ப.சிதம்பரம் அணுகியுள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஆனால் அதற்கு முன்பே சிதம்பரத்தைக் கைது செய்துவிட வேண்டும் என  சிபிஐ தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

இதனிடையே சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்து விட்டதால் அவர் கைது நடவடிக்கைகளில் இருந்து  தப்பிக்க முடியாது என பாஜக எம்.பி.சுப்ரமணியன்சுவாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிதம்பரம் முன் ஜாமீன் வாங்கியே தப்பித்து வருகிறார். ஆனால் அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற சிபிஐன் கோரிக்கையை டெல்லி உயர்நீதிமன்றம் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

தற்போது சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் முடிந்தவிட்டதால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவித்தார். அதே நேரத்தில் உச்சநீதிமன்றமும் இந்த விஷயத்தில் தலையிட வாய்ப்பில்லை என்பதால் ரீகவுண்ட்டிங் மினிஸ்டர் ஜெயிலுக்குப் போவது உறுதி என சுப்ரமணியன் சுவாமி அதிரடியாக தெரிவித்தார்.