இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கருப்பு பணம் என்பது புற்றுநோய் போன்றதாகும். இதை வளரவிட்டால் நாளடைவில் செல்லரித்து நாட்டையே தின்றுவிடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

10 கருணைத்திட்டம்

கருப்பு பணத்தை ஒழிக்க கடந்த 1951- ம் ஆண்டில் இருந்து 1997-ம் ஆண்டுவரை 10 கருணை திட்டங்களை மத்தியஅரசுகள் கொண்டுவந்ததில், எதுவுமே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அமையவில்லை. அனைத்து திட்டங்களுமே அரசியல்வாதிகள், அதிகாரிகளின் சுயலாபத்துக்காக பயன்படுத்தப்பட்டன. 

மத்தியில் ஆளும் மோடி அரசில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கொண்டு வந்த தாமா முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் ஐ.டி.எஸ். திட்டத்தைத் போல், கடந்த 1997-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வி.டி.ஐ.எஸ். திட்டம் கொண்டுவந்தார். 

காங்கிரஸ் திட்டம்

அதில் என்ன வேடிக்கை என்னவென்றால், சொத்துக்கள், கருப்புபணத்தை வெளிக்காட்டினால் சந்தையின் மதிப்பை இரு மடங்காக்கி, அதில் பாதிக்கும் குறைவாகவே வரியாக செலுத்த காங்கிரஸ் ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. 

 கருப்பு பணம் வைத்திருக்கும் நிறுவனங்கள் 35 சதவீத வரியும், தனிநபர்கள் உள்ளிட்ட இதர தரப்பினர் 30 சதவீதமும் வரி செலுத்தினார்கள். அதிலும் வரிக்கு வட்டி இல்லை, அபராதம் இல்லாததால், நாடு முழுவதிலும் இருந்து ஏறக்குறைய 4.75 லட்சம் பேர் வருமானத்தை வெளியிட்டனர். 

9 ஆயிரம்கோடி

இதன் மூலம் அரசுக்கு ரூ. 33 ஆயிரம் கோடி கணக்கில் வராத பணம் வசூலானது என காங்கிரஸ் அரசு மார் தட்டிக்கொண்டது. ஆனால், என்னவோ அரசுக்கு வரி மூலம் அரசுக்கு சென்றது ரூ. 9 ஆயிரத்து 760 கோடிதான். 

2 திட்டம்

ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிநாடுகள், உள்நாட்டிலும் இந்தியர்கள் பதுக்கிவைத்து இருக்கும் கருப்பு பணத்தை மீட்க இரு திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

அதில் முதலாவதாக, வெளி நாடுகளில் கருப்பு பணத்தை மீட்கும் திட்டத்தில், ஏறக்குறைய 644 பேர் மட்டுமே கணக்கு காட்டினர். அரசுக்கு ரூ.4 ஆயிரத்து 147 கோடிமட்டுமே கிடைத்தது.

ஐ.டி.எஸ்.

உள்நாட்டில் புழங்கும் கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர திட்டமிட்டு கொண்டு வந்ததுதான் தாமாக வருமானத்தை தெரிவிக்கும் திட்டம்(ஐ.டி.எஸ்.). 

ஆனால், காங்கிரஸ் கொண்டு வந்த திட்டத்துக்கும், பா.ஜனதா கொண்டு வந்த திட்டத்துக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. ஜெட்லியின் இந்த திட்டத்தில் கீழ் 30 சதவீதம் வரி, 7.5 சதவீதம் கூடுதல்வரி, 7.5 சதவீதம் அபராதம் என மொத்தம் 45 சதவீத வரி செலுத்தி தப்பிக்கலாம். 

4 மாதம்

கடந்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட் இந்த திட்டம், 4 மாதங்கள் வரை அவசாகம் அளிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 30-ந்தேதிதான் முடிந்தது. 

ரூ.65 ஆயிரம் கோடி

இந்த 4 மாத காலத்தில் நாடுமுழுவதும் 9 லட்சம் பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். 4 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால், 65 ஆயிரத்து 275 பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தனர். கணக்கில் வராத ரூ. 65 ஆயிரத்து 250 கோடி பதுக்கல் பணம் வெளிச்சத்துக்கு வந்தது. அதுமட்டுமல்ல இன்னும் ரூ. 10 ஆயிரம் கோடி பணத்தின் விவரங்கள் சேகரிக்கப்படவில்லை. அடுத்த சில நாட்களில் முழுமையான புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும் என அரசு தெரிவித்திருக்கிறது. 

வரிவருவாய்

 இந்த திட்டத்தின் முக்கிய அம்சத்தை பார்த்தால் சராசரியாக தனிநபர் ரூ. ஓரு கோடி வரியாக அரசுக்கு செலுத்தியுள்ளார். அரசுக்கு ஓட்டுமொத்தமாக ரூ. 29 ஆயிரம் கோடி வரியாக மட்டுமே கிடைக்க இருக்கிறது. இதில் பாதி அதாவது ரூ.14 ஆயிரம் கோடி, இந்த நிதியாண்டிலும், மீதப்பகுதி அடுத்த நிதியாண்டிலும் கிடைக்கும். ஏனென்றால் வரிசெலுத்துவோர் வசதிக்காக இரு பிரிவுகளாக செலுத்தலாம் என அரசு தெரிவித்தது.

தெலங்கான முதலிடம்

இதில் அதிகபட்சமாக தெலங்கானா, மற்றும் ஆந்திரா மாநிலங்களி்ல் மட்டுமே ரூ. 15 ஆயிரம் கோடி முதல் ரூ.20 ஆயிரம் கோடி வரை கணக்கில் காட்டப்பட்டுள்ளதாகம். அடுத்த மும்பையில் ரூ. 8,500 கோடி, டெல்லியில் ரூ. 7 ஆயிரம்கோடி, புனேயில் ரூ. 4 ஆயிரம் கோடி, மேற்குவங்காளத்தில் ரூ.4 ஆயிரம் கோடி, தமிழகத்தில் ரூ.2,500 கோடி கணக்கில் காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பல் இல்லாத....

கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர அப்போது காங்கிரஸ் ஆட்சியிலும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன, இப்போது மோடி ஆட்சியிலும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஆனால், ப.சிதம்பரம் கொண்டு வந்த வி.டி.ஐ.எஸ். திட்டம் என்பது பற்கள் இல்லாத திட்டம்தான் எனக் கூற முடியும்.

அந்த திட்டத்தின் செயலாக்கம், நோக்கம், பலன் கடைசி வரை அரசுக்கும் கிடைக்கவில்லை, மக்களுக்கும் பலன் போய் சேரவில்லை. ஆனால், கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் அரசின் ஆதரவோடு வெள்ளையாக்கினர். 

இவ்வளவுதானா

ப.சிதம்பரம் கொண்டு வந்த திட்டத்தில் மொத்தமாக வெளிவந்த தொகை ரூ. 33 ஆயிரம் கோடி, அரசுக்கு வரியாக கிடைத்தது ரூ.9 ஆயிரத்து 750 கோடி. 

ஆனால், நிதியமைச்சர் அருண்ஜெட்லி கொண்டு வந்த ஐ.டி.எஸ். திட்டம் மூலம் வெளியான கருப்புபணம் ரூ. 65 ஆயிரத்து 250 கோடி. அரசுக்கு கிடைக்கும் வரி ரூ. 29 ஆயிரம் கோடி. ஆக திட்டத்தின் நோக்கம், அணுகமுறை, செயலாக்கம், அனைத்தும் சரியான பாதையில் பயணித்துள்ளதையோ காட்டுகிறது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தாதவர்கள் நிச்சயம் எதிர்காலத்தில் தண்டிக்கப்படுவார்கள் என்ற அரசின் எச்சரிக்கை, பற்கள் உள்ள அமைப்பாக மாறியது ஓருபுறம், திட்டத்தின் நோக்கம் சரியான பாதையில் பயணம் செய்திருப்பதையே காட்டுகிறது.

வெற்றி கிடைத்தது எப்படி?

ஐ.டி.எஸ். திட்டம் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டதில் இருந்து வருமானவரித்துறையினர் சமூக வலைதளங்களிலும், சாலைப் பிரசாரங்களிலும், மக்களுக்கு விழிப்புணர்வு பிராசரம் செய்தது அனைத்து தரப்பிலும் சென்று சேர்ந்தது.

இரண்டாவதாக, கருப்பு பணத்தை தெரிவிப்போரின் விவரங்கள் பாதுகாக்கப்படும், ரகசியமாக வைக்கப்படும் என்று அரசு உறுதியளித்தது நம்பிக்கையளிப்பதாக இருந்தது.

5,500 கூட்டம்

மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க, இதுவரை 5 ஆயிரத்து 500 பொதுக் கூட்டங்களை நாட்டின் பல்வேறு நகரங்களி்ல் நடத்தி இருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா.

கருப்புபணம் குறித்த சரியான பார்வை மக்களி்டத்தில், சரியான தடத்தில் கொண்டு சேர்க்கப்பட்டது இந்த திட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகும். சமூகவலைதளங்களில் இந்த திட்டம் குறித்த கேள்வி பதில்கள், சந்தேகங்கள் , விளக்கங்கள் அளித்தது இன்னும் எளிதாக மக்களிடம் போய் சேர்ந்தது. 

பிரதமர் மோடி

நாடுமுழுவதும் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளை வீடியோ கான்பிரன்சிங் மூலம் வாரம் ஓரு முறை மத்திய வருவாய்துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா சந்தித்து ஆலோசனை நடத்தியது, பிரதமர் மோடி பல பொதுக்கூட்டங்களிலும், மேடைகளிலும் கருப்புபணத்தை வெளியிட வேண்டிய செய்த பிரசாரம் இந்த திட்டத்தின் வெற்றிக்கு முக்கிக் காரணமாகும். 

சி.ஏ.ஜி. யின் சோதனை இருக்கு

மத்திய அரசு தற்போது வெற்றிகரமாக்கியுள்ள ஐ.டி.எஸ்.திட்டத்தை மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் ஆய்வு செய்யலாம் எனத் தெரிகிறது. மக்கள் மத்தியில் எப்படி செயல்படுத்தப்பட்டது, இதில் உண்மையிலேயே இந்த அளவு பணம் ஒப்படைக்கப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்து சி.ஏ.ஜி. அறிக்கை அளிக்கும். 

 கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வி.டி.ஐ.எஸ். திட்டத்தை சி.ஏ.ஜி. அலுவலகம் ஆய்வு செய்து, 2000ம் ஆண்டில் அறிக்கை வெளியிட்டது. 

அப்போது, காங்கிரஸ் அரசுகொண்டு வந்த திட்டத்தில் பல்வேளு ஓட்டைகள் இருந்தன, சில பிரிவுகளுக்கு தெளிவான விளக்கங்கள் இல்லை, அதில் அதிகமாகப் பலனடைந்தது, கருப்பு பணம்பதுக்கியவர்களே, குறிப்பிட்ட சிலர் மீது வருவாய் புலனாய்வு மூலம் ஏன் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை அடுக்கடுக்காக கேள்விகளால் துளைத்து எடுத்து அறிக்கை அளித்து.

இப்போதுள்ள திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும். 

............................ விலங்கையா.க