இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96 ஆயிரத்தை கடந்துவிட்டது. கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராததால், தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், அதிலிருந்து மீண்டு இந்தியாவை தன்னிறைவு பொருளாதார நாடாக கட்டமைக்கும் விதமாக பிரதமர் மோடி சுயசார்பு பாரதம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன்படி, உள்நாட்டு உற்பத்திக்கும் உள்நாட்டு வணிகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவை சுயசார்பு பொருளாதார நாடாக உருவாக்கும் விதமாக,அந்த திட்டத்திற்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்குவதாக, மக்களிடம் கடந்தமுறை உரையாடும்போது பிரதமர் மோடி தெரிவித்தார். 

சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடிக்கான அறிவிப்புகளை 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், மின்னுற்பத்தி நிறுவனங்கள், விவசாயம், புலம்பெயர் தொழிலாளர்கள், பழங்குடி மக்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், அணுசக்தித்துறை, ரியல் எஸ்டேட், சிறு, குறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயம் சார்ந்த பால்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை என அனைத்து தரப்பையும் உள்ளடக்கும் விதத்தில், மொத்தம் ரூ.20,97,053 கோடிக்கான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். 

சரிவிலிருக்கும் இந்திய பொருளாதாரத்தை, உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து மீட்டுருவாக்கம் செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த மற்றும் வேறு சில பொருளாதார நிபுணர்களும் தொழில்துறையினரும் அதிருப்தி தெரிவித்தாலும் பெரும்பாலானோர் மத்திய அரசின் அறிவிப்புகளை வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், சுயசார்பு திட்டத்திற்கான மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகள் குறித்து டுவீட் செய்துள்ள முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், பிரதமரும் நிதியமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்க திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல; வெறும் ரூ.1,86,650 கோடி தான். இந்த எண்ணை எப்போழுதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.