கருணாநிதியின் மனதில் ’மகன்’ லெவலுக்கு இடம் பிடித்து வைத்திருந்த திருமாவளவனுக்கு, கூட்டணியில் இடம் கொடுக்க கூட ஸ்டாலினுக்கு இன்னும் மனம் வரவில்லை! என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மனதை காயப்படுத்திக் கொண்டிருக்கும் விவகாரம். 

வி.சி.கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி எந்தளவுக்கு தங்கள் கூட்டணியில் செல்வாக்கும் மரியாதையும் தந்து வைத்திருந்தார் என்பது உலகமறியும். வட தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்கு வைத்திருக்கும் பா.ம.க.வை திருமாவுக்காக பகைத்துக் கொள்ள கூட கருணாநிதி தயங்கியதில்லை. 

அதேபோல் திருமாவும் கருணாநிதியை தனது தந்தை ஸ்தானத்தில்தான் வைத்துப் பார்த்தார். தன் பர்ஷனல் முடிவுகள் பலவற்றை கருணாநிதியிடம் கேட்டுதான் முடிவெடுப்பார். திருமாவின் பெற்றோர் கருணாநிதியிடம் ‘அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வையுங்கய்யா’ என்று கேட்குமளவுக்கு இருந்தது உரிமையும், சுதந்திரமும், மரியாதையும், செல்வாக்கும். அதேபோல் தேர்தல் நேரத்தில் கருணாநிதி தரும் தொகுதிகளின் எண்ணிக்கையையும், ஒதுக்கும் இடங்களையும் ‘அவரு முடிவெடுத்தா சரியாதான் இருக்கும்.’ என்று எதிர்ப்பு காட்டாமல் ஏற்றுக் கொள்வார் திருமா.

 

முரண்பட்டாலும் கூட அது முரட்டுத்தனமாய் இருக்காது. கருணாநிதிக்கும், திருமாவுக்குமிடையில் அரசியல் மற்றும் பாச பந்தங்கள் இந்தளவுக்கு இருந்தாலும்  ஸ்டாலினுக்கும், திருமாவுக்கும் ஆகவே ஆகாது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமா தி.மு.க.விடமிருந்து பிரிந்து மக்கள் நல கூட்டணியில் முன்னணியில் நின்று தி.மு.க.வுக்கு எதிராக முழங்க ஸ்டாலினும் முக்கிய காரணம். ம.ந.கூ. மிக கடுமையாய் தோற்று, திருமா மீண்டும் கோபாலபுரம் பக்கம் ஒதுங்கியபோது ஸ்டாலின் தரப்பு அதை கடுமையாய் எதிர்த்தது. 

ஆனால் கருணாநிதி மறந்தார், மன்னித்தார். அடிப்படையில் ஸ்டாலின் - திருமாவுக்கு இடையில் பர்ஷனலாகவோ, குறிப்பிட்டு சொல்லும்படியோ பெரிதாய் எந்த மோதலும் நேருக்கு நேராய் கிடையாது. ஆனால் ஸ்டாலினை சுற்றியுள்ள சிலருக்கு திருமாவை ஆகவே ஆகாது. அதேபோல் திருமாவை சுற்றி இருக்கும் நபர்கள் சிலருக்கு ஸ்டாலினை கண்டாலே வெறுப்பு. இந்த மோதல் உள் அளவில் மட்டுமே  இல்லாமல் ஒரு கட்டத்தில் சோஷியல் மீடியாவில் இரு தரப்பும் பெயரைப் போட்டு மோதிக் கொள்ளுமளவுக்கு உச்சம்  தொட்டது. 

திருமாவை தி.மு.க.வின் இணையதள அணி தாக்க, பதிலுக்கு வன்னியரசு வகையறாவினர் ஸ்டாலினை பொரித்தெடுத்தனர். இது சில நாட்கள் தொடர்ந்தது. ஆனால் இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் பொது வெளியில் பெரும் விமர்சனத்துக்கு ஆளானதால் ஸ்டாலின், திருமா இருவரும் தலையிட்டு நிறுத்தினர். பின் சுகவீனமாக இருந்த கருணாநிதியை, திருமா சந்திக்க வர, அவரை ஸ்டாலின் அழைத்துச் செல்ல நிலைமை சுமுகமானது. இதன் பிறகு திருமா வெகுவாகவே இறங்கி வந்தார். கோயமுத்தூரில் நடந்த இந்திராகாந்தியின் நூற்றாண்டுவிழா முடிவடையும் நிகழ்வு மேடையில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் என பல கட்சிகளின் தலைவர்களின் முன்னிலையில் ‘ஸ்டாலினை தமிழக முதல்வராக்குவோம்!’ என்று சூளுரைத்தார் திருமா.  

இதன் பிறகு பல அரசியல் நிகழ்வுகள் நடந்தேறி முடிந்துவிட்டன. இதோ நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 20 தொகுதிகளின் சட்டசபை இடைத்தேர்தல் ஆகியவற்றுக்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் தயாராகிவிட்டன. தி.மு.க.வுக்கு இவ்வளவு, காங்கிரஸுக்கு இவ்வளவு, கம்யூனிஸ்ட்டுகளுக்கு இவ்வளவு, முஸ்லீம் லீக்குக்கு இது, ம.ம.க.வுக்கு இது என்றெல்லாம் தகவல்கள் தடதடக்க துவங்கிவிட்டன. ஆனால் அந்த அலசலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயர் லிஸ்டிலேயே இல்லை. 

ஏன் என்று விசாரித்தால் ‘தி.மு.க. கூட்டணியில் திருமாவை இன்னமும் அதிகாரப்பூர்வமாக ஸ்டாலின் உறுதிப்படுத்தவில்லை.’ என்கிறார்கள். ஏன்? என்று கேட்டால் ‘டெல்லி சென்று ராகுலை திருமா சந்தித்து செய்த லாபிகள் ஸ்டாலினுக்கு கடும் எரிச்சலை தூண்டிவிட்டது. மேலும் அ.தி.மு.க. சைடிலும் அடிக்கடி திருமா கோல்போடுவதும் இதற்கு காரணம்.’ என்கிறார்கள். திருமா தரப்போ ‘கமல் சொல்லியது போல் கருணாநிதி எல்லாரையும் அரவணைத்தும், அணுசரித்தும் செல்வார்.

ஆனால் ஸ்டாலின் மிகவும் ரிசர்வ்டாக இருக்கிறார். அதிலும் விடுதலை சிறுத்தைகளிடம் அநியாயத்துக்கு விறைப்பு காட்டுகிறார். ஒரு உண்மையை சொல்வதென்றால், அன்புமணியிடம் இருக்கும் சிநேக உணர்வு கூட ஸ்டாலினிடம் இல்லை.’ என்கிறார்கள். ஆக திருமா இன்னமும் தி.மு.க. கூட்டணிக்கு வெளியேதான் நிற்கிறாராம்.