கஜா புயல் நிவாரணப் பணிகள் துவங்கிய முதல் நாளிலிருந்தே இந்தச் செய்தி அரசல்புரசலாக நடமாடிக்கொண்டுதான் இருக்கிறது. ..ச்சீய் அப்பிடியெல்லாம் இருக்காதுங்க. அவனுங்களே உசுரைக் கையில புடிச்சுட்டு உட்கார்ந்திருக்கானுங்க. இப்பப்போய் ஜாதி பாப்பானுகளா என்று சப்பைக்கட்டு பதில்களும் வந்துகொண்டிருந்தன. அது இன்னைக்குல்லாம் யார்ங்க ஜாதி பாக்குறா? மாதிரியான பட்டப்பகல் சீட்டிங்தான் என்று தெரியவந்திருக்கிறது.

 இன்றைய தினம் முகநூல் பக்கங்களில் வெளியாகியிருக்கும் சில பதிவுகளும் ஒன்றிரண்டு படங்களும் அந்த கொடிய செய்தியை ஊர்ஜிதப்படுத்துகின்றன. நிவாரண உதவிகள் நடக்கும் இடங்களில் தாழ்த்தப்பட்டோர் என்று அவர்கள் நினைக்கிற ஜனங்களுக்கு தனி முகாம் அமைத்து உணவுகளும் மற்ற உதவிகளும் தனியாய் வழங்கப்படுவதாகவும், இது கஜா புயல் பாதிக்கப்பட்ட பல இடங்களிலும் கடைப்பிடிக்கப்படுவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயற்கையின் சீற்றத்துக்கு முன்னே மனிதன் சிறு துரும்பு கூட இல்லை என உணரும் ஒரு தருணத்தில் கூட ஜாதி பார்க்கிற, தாழ்த்தப்பட்டவனே உனக்கு தனி முகாம் என்று தள்ளி வைக்கிற ஒரு கூட்டம் இருப்பது உண்மையெனின் அந்தக் கூட்டத்துக்காக மட்டும் கஜா புயலே நீ இன்னும் கொஞ்சம் கடுமையாக வீசு.