அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினா்கள் அடுத்த 4 நாட்களுக்கு சென்னையை விட்டு வேறெங்கும் செல்லக்கூடாது என உத்தரவு பறந்துள்ளது.
டிசம்பர் 5-ம் தேதி அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைந்தார். அதன் பிறகு அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக வி.கே. சசிகலா தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்களால், சட்டமன்றக் கட்சித் தலைவராக, அதாவது முதலமைச்சா் பதவி ஏற்பதற்கான கட்சித் தலைவராக ஒருவழியாக அனைவரும் எதிர்பார்த்தபடியே வி.கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பின்னா், முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், 'எனது தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இதை ஏற்றுக்கொண்டு, அமைச்சரவையை கலைக்க வேண்டும்' எனக்கூறியுள்ளார்.

இன்னும் ஓரிரு நாளில் வி.கே. சசிகலா முதலமைச்சராக பாெறுப்பேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினா்கள் அனைவருக்கும் ஒரு உத்தரவு பறந்துள்ளது. அதாவது அடுத்த 4 நாட்களுக்கு சென்னையை விட்டு வேறெங்கும் அதிமுக எம்எல்ஏக்கள் எங்கும் செல்லக்கூடாது என அதில் தொிவிக்கப்பட்டுள்ளது.
