சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏ க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, அதிமுக சட்டமன்ற குழுத்தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து சசிகலா நாளையோ அல்லது 9 ஆம் தேதியோ முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அதற்கு வசதியாக முதலமைச்சர் ஓபிஎஸ் நேற்றே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
ஓபிஎஸ் சின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ்,புதிய முதலமைச்சர் பதவியேற்கும் வரை ஓபிஎஸ் முதலமைச்சராக செயல்படுவார் என அறிவித்தார்.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை சசிகலா முதலமைச்சராகிவிட்டாலும் இந்த வழக்கில் இருந்து சசிகலா விடுவிக்கப்பட்டால் மட்டுமே அவரால் முதலமைச்சராக தொடர முடியும். எனவே அவரது தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் க்கு 4 ஆவது முறையாக முதலமைச்சராகும் வாய்ப்பு உருவாகும் என ஆருடம் கூறினார்.

ஏற்கனவே நீதிமன்ற நடவடிக்கைகளால் 3 முறை ஜெயலலிதா பதவி விலகிய போது ஓபிஎஸ்தான் முதலமைச்சரானார். எனவே அடுத்த வாரம் சொத்து குவிப்பு மேல்முயையீட்டு வழக்கின் தீர்ப்பு வரும்போது ஓபிஎஸ் மீண்டும் முதலமைச்சராவர் என ஸ்டாலின் தெரிவித்தார்.
