காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முதற்கட்ட ஆய்வுகள் நடத்த கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அனுமதியைத் திரும்பப் பெற வேண்டுமென பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வரும் டிசம்பர் 4ஆம் தேதி, திருச்சியில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “காவிரி தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், அதனை காவிரி மேலாண்மை ஆணையம்தான் பேசி, இரு மாநிலங்களின் ஒப்புதலுடன் செயல்படுத்த வேண்டும் என்ற சட்ட விதி இருக்கிறது. அதனை மீறி மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்தார்.

மேலும், கஜா புயல் மிகப்பெரிய இயற்கைச் சீற்றம், முன்பு வந்த புயல்களைக் காட்டிலும் மிகவும் கடுமையானது. அரசியல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டன என்ற பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் படுவேகத்துடன் நடைபெற்றுவருகிறது. மனிதாபிமானத்துடன் அணுக வேண்டிய இந்த பிரச்சினையை, சில எதிர்க்கட்சிகள் அரசியலாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று குற்றம் சாட்டினார்.

புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு மட்டும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு, “அரசின் பரிசீலனையில் இருக்கிறது” என்று பதிலளித்தார்.

ஸ்டெர்லைட் விவகாரம் குறித்துப் பேசிய பன்னீர்செல்வம், “ஆய்வுக்குழுவின் அறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பாயம் அந்த அறிக்கையை தமிழக அரசுக்கும், ஆலை நிர்வாகத்திற்கும் அனுப்பி கருத்து கேட்கும். அவ்வறிக்கை தமிழக அரசுக்கு வந்தவுடன் நம்முடைய கண்டனத்தைத் தெரிவிப்போம்” என்று குறிப்பிட்டார்.