OPS vs sasikala

ஓபிஎஸ் அணிதான் உண்மையாக அதிமுக…சட்டப்படி வெற்றி பெறுவோம் என பாண்டியராஜன் உறுதி…

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து நாளை தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் விசாரணையில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்து வெற்றி பெறுவோம் என்றும், இரட்டை இலை சின்னத்தை உறுதியாக பெறுவோம் என்றும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

வரும் 12 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் சசிகலா தரப்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார்.

இதே போன்று ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார், இந்த இரு அணிகளிடையே இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் இரு தரப்பின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாளை தேர்தல் ஆணையம் இது குறித்து இரு அணியினரிடமும் விசாரணை நடத்தி தீர்ப்பு இளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், மதுசூதனன் வரும் 23 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவது குறித்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கையெழுத்திட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஓபிஎஸ் அணிதான் உண்மையான அதிமுக என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளதாக தெரிவித்தார்.

எனவே அதிமுகவும், இரட்டை இலையும் எங்களுக்கே சொந்தம் என பாண்டியராஜன் தெரிவித்தார்.