ops team mla mp meeting organising tomorrow

ஓ.பி.எஸ். அணியில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனை ஓரங்கட்டும் பணிகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டன. நேற்றிரவு செயதியாளர்களைச் சந்தித்த நிதி அமைச்சர் ஜெயக்குமார்,மக்களின் விருபத்திற்காகவும், ஆட்சியையும் கட்சியையும் காக்க சசிகலா குடும்பத்தை விலக்கி வைப்பதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை இன்று மாலை கூட்டுவதாக அறிவித்து பரபரப்பு கூட்டினார் தினகரன். பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல டிடிவியின் காலைச் சுற்றிக் கொண்டிருக்கும் அந்நிய செலாவணி வழக்கு அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்காக மாலை 3 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று அதிரடியாக அறிவித்தது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.

பரபரப்பின் உச்சமாக அதிமுகவில் இருந்து நான் நேற்றே விலகிவிட்டேன். கட்சியும் ஆட்சியும் பறிபோக நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று தடாலடியாக அறிவித்தார் டிடிவி தினகரன்.. டிடிவியின் இந்த முடிவுக்குப் பின்னால் மத்திய அரசு இருப்பதாகவே கூறப்படுகிறது.

கலகம் ஏற்படுத்தாமல் விலகிக் கொண்டால் பிரச்சனை இல்லை . இல்லை மோதிப்பார்க்கலாம் என்று சவால் விடுத்தால் திகார் சிறை தயாராக இருப்பதாக மிரட்டல் வந்ததால் தினகரன் அடிபணிந்தாகக் கூறப்படுகிறது.

நினைத்தது நடந்து விட்டதால் ஓ.பி.எஸ். மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துக் கொண்டுள்ளார். விரைவில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது தனக்கு எத்தனை அமைச்சர்களை பெறுவது என்பதில் அவர் மிகத் தெளிவாக உள்ளாராம்.

இது தொடர்பாக நாளை தனது அணியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் இடையே அவர் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது யாருக்கு என்ன அமைச்சர் பதவியை பெறுவது என்பது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது