தமிழக அரசு குறித்த விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு என்றும், அரசை குறை கூறும் கமலஹாசன் மீது தாக்குதல் நடத்துவது தவறு என்றும்  முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கருத்துத் தொரிவித்தார்.

தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது என்று பேசி நடிகர் கமலஹாசன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கமலில் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அமைச்சர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கமலஹாசனை கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றனர்.

அமைச்சர்களின் இந்தப் பேச்சுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போன்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன், கமலஹாசனின் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர அமைச்சர்கள் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என தெரிவித்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், ஜனநாயக நாட்டில், கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் , அவரின் கருத்துக்கு அமைச்சர்கள் உரிய பதிலளிக்க வேண்டும் என தெரிவித்தார்.