அதிமுகவுக்கு பெருகும் ஆதரவைக் கண்டு ஸ்டாலினுக்கும் தினகரனுக்கும் பொறுக்க முடியவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தேனி அல்லது விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் முடிவு செய்திருக்கிறார். தேர்தலில் போட்டியிட அவருக்கு சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கட்சிப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதில் அவர் ஆர்வம் காட்டி வருகிறார். 

இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் அம்மா பேரவை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதா வழியில் அதிமுகவை கட்டிக்காத்து வருகிறார்கள். ஒரு பக்கம் கட்சி என்றும் இன்னொரு பக்கம் ஆட்சி என்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். 

ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை நிறைவேற்று வருகிறார்கள். அதுமட்டுமல்ல, மக்களின் மனநிலையை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாயை அதிமுக அரசு கொடுத்தது. அடுத்ததாக வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள தொழிலாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் வழங்க உள்ளது. இந்தத் திட்டங்களைப் பார்த்தவுடன் மக்கள் மத்தியில் இந்த அரசுக்கு பெரும் ஆதரவு பெருகியுள்ளது. இதனைப் பார்த்து ஸ்டாலினாலும் தினகரனாலும் பொறுக்க முடியவில்லை. 

இந்த அரசு ஒரு வாரத்தில், ஒரு மாதத்தில் போய்விடும் என்று சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். ஆனால் இன்று இந்த அரசு இரண்டு ஆண்டு காலம் கடந்து வீறு நடைபோட்டு வருகிறது. இதைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் அசந்துபோயிருக்கிறார்கள். இவ்வாறு ரவீந்திரநாத் பேசினார்.