துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரை போன்லெஸ் பீஸ் என்கிற அடைமொழியுடன் சமூகவலைதளவாசிகள் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார். மக்களவையில் அதிமுகவிற்கு இருக்கும் ஒரே எம்பி ரவீந்திரநாத் குமார் தான். அதனால் அவர் தான் அதிமுக மக்களவை குழு தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். 

நாடாளுமன்றத்தில் பேசும் போதும் சரி முக்கியமான விசயங்களில் அதிமுகவின் நிலைப்பாடுகளை எடுத்தக்கூறும் போதும் ரவீந்திரநாத் கிட்டத்தட்ட பாஜக எம்.பி.யாகவே மாறிவிடுகிறார் என்கிற விமர்சனம் உண்டு. உதாரணமாக முத்தலாக் மசோதாவை மாநிலங்களவையில் அதிமுக எதிர்த்தது. ஆனால் மக்களவையில் அந்த மசோதாவை முழு மனதோடு ஆதரிப்பதாக ரவீந்திரநாத் பேசினார்.

இதேபோல் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் எழும் பிரச்சனைகளில் தமிழக மக்களுக்கு சாதகமாக இல்லாமல் மோடிக்கு சாதகமாகவே ரவீந்திரநாத் பேசுவதாக கூறப்படுகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு ஆர்எஸ்எஸ் பிரமுகர் போலவே பேசி அதிமுகவினரையே அதிர வைத்தார் ரவீந்திரநாத்.

 

இதனால் ரவீந்திரநாத் விரைவில் பாஜகவில் ஐக்கியமாக உள்ளதாக கூறப்பட்டது. ஆனாலும் கூட தன்னுடையை நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பாஜக ஆதரவு மனநிலையில் தான் தனது கருத்துகளை கூறி வருகிறார் ரவீந்திரநாத். அண்மையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் காவிரி கூக்குரல் பேரணியில் முழு மூச்சாக ரவீந்திரநாத் பங்கேற்றார்.

இப்படி பாஜகவினரோடு நெருக்கமாக இருப்பவர்களுடனும் நெருக்கத்தை ரவீந்திரநாத் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் போன்லெஸ் பீஸ் என்கிற வார்த்தை சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அது குறித்து என்ன என்று பார்த்த போது ரவீந்திரநாத்தை அப்படி கூறி திமுகவினர் மட்டும் அல்லாமல் பலரும் அழைத்து வருவது தெரியவந்துள்ளது.