மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி. மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். 

நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதில் அதிமுக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றார். மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பின் போது அதிமுக சார்பில் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதியில் எடப்பாடியால் இது தவிர்க்கப்பட்டது.

 

இந்நிலையில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து இன்று காலை 9.00 மணியளவில் மெரினாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் இன்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் உதயகுமார், எம்.எல்.ஏ. ஜக்கையன், தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தேனி தொகுதியில் பெற்ற வெற்றியை, ஜெயலலிதாவிற்கு சமர்ப்பிக்கும் வகையில் இந்த விசிட் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் எம்ஜிஆர், அண்ணா நினைவிடங்களிலும் இவர்கள் அஞ்சலி செலுத்தினர்.