யாரிடமும் குனிந்து கும்பிடு போட்டோ குழந்தைபோல நடந்தோ பதவியை பெறவில்லை என திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பேசியது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது 

தமிழக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பேச்சால் திமுக - அதிமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் செந்தில் பாலாஜி பேசுகையில், “யாரையும் கும்பிட்டு போட்டு தலைவர் பதவி பெறவில்லை. குழந்தை போல் தவிழ்ந்து பதவி பெறவில்லை. தமிழகத்தின் எதிர்காலம் மு.க ஸ்டாலின்” என்று பேசுகையில் குறிப்பிட்டார்.

இதனால் அவரது பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பெரும் வாக்குவாதம் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’’கும்பிட்டு, குனிந்து பதவி பெற்றதாக செந்தில் பாலாஜி குறிப்பிட்டது தவறு. 3 ஆண்டுகளில் அவர்  எத்தனை அணிக்கு மாறி இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும் எனத் தெரிவித்தார்.

இடைமறித்த மு.க.ஸ்டாலின், ‘’செந்தில் பாலாஜி காட்சி மாறியதாக பேசும், முதல்வர் அருகில் அமர்ந்திருக்கும் துணை முதல்வர் தர்ம யுத்த காலத்தில் பேசுயதைப் பற்றி பேசுவாரா? எனக் கேட்டார்

அதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பிஎஸ், ’’எங்கள் இயக்கத்துக்காக தான் தர்மயுத்தம் செய்தோம். தர்மயுத்தம் எதற்காக தொடங்கினேன். அந்த தர்மயுத்தம் வெற்றி அடைந்து விட்டது. தர்மயுத்தத்தில் முதல்வரும் வெற்றி பெற்று இருக்கிறார். ஜெயலலிதாவை பார்த்து செந்தில் பாலாஜி எத்தனை முறை கும்பிடு போட்டார் என தெரியும். எங்கள் தசுயநலத்திற்காக கட்சிகளை மாறவில்லை. செந்தில் பாலாஜியின் காலில் உள்ள ஸ்கேட்டின் சக்கரத்தை கழற்றி உட்கார வையுங்கள். செந்தில் பாலாஜி குனிந்து குனிந்து பதவி வாங்கிய வீடியோக்கள் என்னிடம் உள்ளது. காட்டவா? எனத் தெரிவித்தார்.

உடனே மு.க.ஸ்டாலின், ‘’நீங்கள் தவழ்ந்து தவழ்ந்து பதவி வாங்கிய வீடியோ எங்களிடமும் உள்ளது. காட்டவா?’’ எனக் கூறினார். 
இதனை அடுத்து, செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது மு.க ஸ்டாலின் குறித்து பேசியதை, எடப்பாடி பழனிசாமி வாசித்துக்காட்டினார்.

உடனே துரைமுருகன், ’ஒரு கட்சியில் இருக்கும் உறுப்பினர் அக்கட்சியின் கொள்கை போக்கு பிடிக்காமல் வேறு கட்சிக்கு வருவது இயல்பான ஒன்று. ஆனால், முன்பு பேசியதை எடுத்து விமர்சிப்பது நாகரீகமான போக்கு அல்ல’’ என இந்த வாதத்தை முடித்து வைத்தார். இரு தரப்பு வாதங்களால் இன்றைய சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. 

செந்தில் பாலாஜி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்து, டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக சென்றதால், பதவியை இழந்து, பின்னர் திமுகவுக்கு வந்து அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வென்று திமுக எம்.எல்.ஏவாக முதன் முறையாக தற்போது சட்டமன்றத்தில் இருக்கிறார்.