எம்எல்ஏக்கள் உங்களுக்கு…கட்சியும் தொண்டர்களும் எங்களுக்கு…ஓபிஎஸ் உற்சாகம்….

தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலா பக்கம் இருந்தாலும், அதிமுக தொண்டர்கள் 100 சதவீதம் பேர் எங்களுக்கே ஆதரவு அளித்து வருகிறார்கள் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் உறுதிபடத் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நேரத்தில் முதலமைச்சராக ஓபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் சசிகலா ஓபிஎஸ்ஐ நீக்கிவிட்டு முதலமைச்சராக முயற்சி செய்தார். இதனால் சசிகலா ஓபிஎஸ் இடையே அதிகார சண்டை தொடங்கியது. இதையடுத்து ஓபிஎஸ் தனி அணியாக செயல்படத் தொடங்கினார்.

அதே நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதால் அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். எடப்பாடிக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர்.

இந்நிலையில் தனி அணியாக பிரிந்து செயல்படும் ஓபிஎஸ்க்கு பொதுமக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ, ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24-ந் தேதி தீபாவுடன் இணைந்து ஒரே மேடையில் பேச உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது சசிகலாவை ஆதரிக்கும் எம்எல்ஏக்கள் தனது ஆதரவாளர்களாக விரைவில் மாறுவார்கள் என தெரிவித்தார்,

உண்மையான அதிமுகவை நிர்ணயிப்பது அக்கட்சியின் அடிப்படை தொண்டர்களும், மக்களும் தான் என்றும் சசிகலா தரப்பில் எம்எல்ஏக்கள் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் எங்களிடம் 100 சதவீத தொண்டர்கள் இருக்கிறார்கள் என ஓபிஎஸ் தெரிவித்தார்.


தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பொது மக்கள் தனக்கு முழு ஆதரவை நேரிலும், தொலை பேசிமூலமும் தெரிவித்து வருகிறார்கள் எனக் கூறிய ஓபிஎஸ், ஜெயலலிதா மீது மக்கள் வைத்த நம்பிக்கையை, அவருடைய உண்மை தொண்டனாகிய என் மீது வைத்து இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், பொறுப்பையும் கொடுத்து இருக்கிறது என தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றி தன்னுடைய எதிர்கால அரசியல் பயணமும் சேவையும் இருக்கும் என ஓபிஎஸ்உறுதிபடத் தெரிவித்தார்.